44வது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா: செஸ் ஒலிம்பியாட் முதல் போட்டிக்கு கருப்பு நிற காய்களை தேர்ந்தெடுத்த பிரதமர்

மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுபிரிவினருக்கான முதல் போட்டியில் இந்தியா விளையாட உள்ளது. அதைப்போன்று பெண்களுக்கான முதல் போட்டியில் அமெரிக்கா விளையாட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கு காய்களை டாஸ் போட்டு தேர்ந்தெடுப்பார்கள். இதையடுத்து நேற்று பிரதமர் அந்த காய்களை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் கருப்பு நிற காய்களை பிரதமர் தேர்ந்தெடுத்தார். அதன்படி இன்று நடைபெறும்  முதல் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் அமெரிக்கா வீரர்கள் கருப்பு நிற காய்களுடன் விளையாட உள்ளனர்.

* நையாண்டி, கரகாட்டம்

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை முன்னிட்டு அடையாறு ஐஎன்எஸ் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை கலை பண்பாட்டு துறை சார்பில் 8 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதாவது தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் தப்பாட்டம், நையாண்டி, கரகம் காவடி, பரதநாட்டியம், ஓயிலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. விழாவில் பங்கேற்க அந்த வழியாக சென்ற விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

* தமிழர்களின் வரலாற்றை காட்டும் ஆவணப் படம்

நேரு உள்ளரங்கில், தமிழர்களின் வரலாற்றை பிரமாண்டமாக விளக்கும் வகையில் அரங்கின் மேலிருந்து கீழ் நோக்கி ஆவணப்படம் ஒளிப்பரப்பானது. அதில், பலர் அந்த காட்சியை விளக்கும் வகையில் நடித்து காட்டினர். இந்த ஆவணப்படத்தை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.  

* அசத்திய மணல் ஓவியம்  

சர்வம் படேல் வரைந்த மணல் ஓவியத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனி கவுரவம் அளிக்கப்பட்டது. மணல் ஓவியத்தில் பிரதமர் மோடியின் படத்தை வரைந்தார் சர்வம் படேல். தமிழா.. தமிழா நாளை நம் நாளே பாடல் இசை பின்னணியில் மோடியின் படம் வரையப்பட்டது. அவர் வரைந்த மணல் ஓவியத்தில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க ஸ்டாலின் இணைந்து காட்சி அளித்தனர்.  

* போட்டி நடக்கும் இடத்தில் 800 போலீசார் பாதுகாப்பு

காஞ்சிபுரம் சரக  டிஐஜி சத்தியபிரியா கூறுகையில், ‘அனைத்து, மாவட்டங்களில் இருந்தும்  போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர். வீரர், வீராங்கனைகள் வரும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. வீரர்கள், தங்கும் 21  விடுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எந்தந்த,   விடுதிகளில் இருந்து வீரர்கள் புறப்படுகின்றார்கள் என்ற விவரம் எங்களுக்கு  முன்கூட்டியே தெரிவிக்கப்படும். போலீசாருக்கு, 3 வேலையும் உணவு  வழங்கப்படும். பெண் போலீசார்கள், போதிய அளவில் நியமிக்கப்பட்டுள்ளனர். போட்டி, நடைபெறும் ரிசார்ட்டில் 3  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போட்டி நடக்க, உள்ள ரிசார்ட்  முழுவதும் மொத்தம் 800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என கூறினார்.

* செல்பி எடுத்து மகிழ்ந்த வெளிநாட்டு வீரர்கள்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட் - செரட்டான் நட்சத்திர ரிசார்ட்டில் இன்று முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரை சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மாமல்லபுரம் வந்த வண்ணம் உள்ளனர். பழைய அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள செஸ் போர்ட்டை, வெளிநாட்டு வீரர், வீராங்கனைகள் பார்வையிட்டு ஆர்வமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories: