இயற்கை முறை பூச்சி மேலாண்மையில் பொறிகளின் பங்கு-வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

மன்னார்குடி : விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்களை தீமை செய்யும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பதற்கு பெரும் பாலும் ரசாயன மருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.

வயல்களில் தீமை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கையில் பெருகி அவற்றினால் உண்டாகும் சேதத்தின் அறிகுறிகள் தெள்ளத் தெளிவாகத் தெரியும் போதுதான் அதனைக் கட்டுப்படுத்த விவசாயிகள் நினைக்கின்றனர். இதுவே, ரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முக்கிய காரணமாகும்.

மேலும், பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஒன்றிற்கு மேற்பட்ட ரசாயன மருந்துகளை ஒன்றாகக் கலந்தும் வயல்களில் தெளிக்கின்றனர். இதனால் சரியான முறையில் கட்டுப்பாடு கிடைப்பதில்லை. மேலும் செலவும் அதிகம் மற்றும் தீமை செய்யும்.பூச்சிகளில் எதிர்ப்புத்தன்மையும் உருவாகி விடுகிறது. ஆனால், தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எளிது. ஆதற்கு பல்வேறு பொறிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி மைய வேளாண் பூச்சியியல் உதவி பேராசிரியர் ராஜாரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர் தங்கபாண்டியன் ஆகியோர் கூறுகையில், விளக்குப் பொறியானது பூச்சிகள் நம் வயல்களில் தீமை செய்யும் பூச்சிகள் உருவாவதை கண்காணித்து அவற்றின் தாக்குதலை முன்னறிவதற்கும், மேலும் அவை எண்ணிக்கையில் அதிகரிப்பதைத் தெரிந்து கொள்வதற்கும் பெரும் பங்காட்டுகின்றன.

எனவே, விளக்குப் பொறிகள் தகுந்த பயிர் பாதுகாப்பு முறைகளை சரியான சமயத்தில் கடைபிடிப்பதற்கும் உதவுகின்றன. 5 ஏக்கருக்கு 1 விளக்குப் பொறி என்ற அளவில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை எரிய விட்டு அவற்றில் கவரப்படும் பூச்சிகளை அழித்துவிடவேண்டும். மேலும், இரவு நேரம் முழுவதும் விளக்குப் பொறியினை எரிய விட வேண்டிய தில்லை. தற்போது சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி இயங்கும் விளக்குப் பொறிகள் உள்ளன.

இவற்றை ஒரு முறை எரிய செய்து எரிய விட் டால் அது தானாகவே மாலை நேரங்களில் எரிந்து சூரிய உதயத்தின்போது எரிவது தானாகவே நின்று விடும். எனவே, தினந்தோறும் இயக்குவது மற்றும் நிறுத்துவதற்கு ஆட்கள் தேவையில்லை. மேலும் இந்த ஒளியானது அதிக பிரகாசம் இல்லாமல் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் எல்இடி பல்புகள் பயன் படுத்தப்படுவதால் தொலை தூரத்திலுள்ள வயல்களிலிருந்து பூச்சிகள் இதனை நோக்கி வருவதற்கு வாய்ப்பில்லை என்பது இதன் சிறப்பாகும்.

மேலும் அதிக ஆண்டுகள் உழைக்கும் தன்மை கொண்டவை.குருத்துப்பூச்சி, பயறுவகைப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள், பருத்தி ஆகியவற்றின் காய்ப்புழுக்கள், தென்னையில் காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்புக்கூன் வண்டு உள்ளிட்வைகளைக் கட்டுப்படுத்த இனக் கவர்ச்சிப் பொறிகள் உள்ளன.சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதில்லை. தீமை செய்யும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்தன்மை உருவாவதில்லை. நன்மை செய்யும் பூச்சிகளுக்கு பாதிப்பில்லை. மற்ற இயற்கை முறைகளோடு இணைந்து பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: