அரசியல் நாணயமற்ற அண்ணாமலை: கே.பாலகிருஷ்ணன் தாக்கு

தஞ்சை: மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி மரணம் குறித்து பாஜ தலைவர் அண்ணாமலை  மதமாற்றம் நடக்குதுன்னு பெரிய போராட்டத்தை நடத்தினார். ஆனால்  கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்த போது அங்கு அண்ணாமலை வரவில்லை.  அந்த பள்ளியை ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் நடத்துகிறார் என்பதால் வரவில்லையா?  இது ஒரு அரசியல் நாணயமற்ற செயல் என கே.பாலகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சையில் நேற்று இரவு மக்கள் கோரிக்கை மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில், மேகதாது அணை சம்பந்தமான வழக்கு, விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாட்டுக்கு கிடைக்கக்கூடிய தண்ணீரை, சுத்தமாக நிறுத்தி விட்டு, மழைக்காலத்தில் உபரி தண்ணீரை மட்டும் கர்நாடக அரசு திறந்து விடுகிறது. மத்திய அரசும், கர்நாடக அரசும், மேகதாதுவில், அணை கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக இருந்து வருகின்றன. கர்நாடகாவில் மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் ஆதாயம் பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு செயல்படுகிறது. தமிழ்நாட்டில் எல்லாரும் சேர்ந்து, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி ஒருவேளை அணையை கட்டினால், தமிழ்நாட்டுக்கு தண்ணீரே கிடைக்காது.

காவிரி டெல்டா பாலைவனமாக மாறி விடுகிற ஆபத்து உள்ளது. நூறு நாள் வேலையை படிப்படியாக மத்திய அரசு, ஒழித்துவிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, அந்த திட்டத்தை செயல்படுத்த கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி மரணம் குறித்து பாஜ தலைவர் அண்ணாமலை மதமாற்றம் நடக்குதுன்னு பெரிய போராட்டத்தையே நடத்தினார். ஆனால் கள்ளக்குறிச்சியில் மாணவி இறந்த போது இதுவரை அங்கு ஏன் அண்ணாமலை வரவில்லை. அந்த பள்ளியை ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் நடத்துகிறார் என்பதால் வரவில்லையா? இது ஒரு அரசியல் நாணயமற்ற செயல். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: