மாணவி தற்கொலை முயற்சி எதிரொலி: திருப்போரூர் எம்எல்ஏ பள்ளியில் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வருபவர் மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி. இவர் படித்த பள்ளியில் கடந்த, 21ம் தேதி தமிழ் இரண்டாம் பருவநிலை தேர்வு நடந்தது. அப்போது, மாணவி கையில் பிட் பேப்பரை வைத்துக் கொண்டு தேர்வு எழுதியதாகவும், அதனை பார்த்த ஆசிரியை அந்த மாணவியை கண்டித்து நீ செய்த தவறை உனது பெற்றோரிடம் கூறிவிடுவேன் என ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அந்த மாணவி பள்ளியின் இரண்டாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி நேற்று நேரில் வந்து ஒவ்வொரு அறையாக சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது, மாணவ - மாணவிகளிடம் பாடம் சம்பந்தமான கேள்விகளையும் கேட்டார். அதற்கு, தெளிவாக மாணவர்கள் பதில் கூறினர். இதனை தொடர்ந்து, பள்ளியின் எதிரே இருந்த மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி ஆய்வு செய்தார்.

அப்போது, எம்எல்ஏ எஸ்.எஸ் பாலாஜி கூறுகையில், ‘திருப்போரூர் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் தொடர்ந்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். இதில், புது பிரச்னைகள் திருப்போரூர் தொகுதி மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. இதற்கு, தீர்வு காணுகின்ற வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பள்ளிகளை சீரமைக்க நிதி ஒதுக்கியுள்ளார். மாணவர்கள், உளவியல் ரீதியான பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறேன். ஒவ்வொரு, அரசு பள்ளியிலும் உளவியல், ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். கழிவறைகளை, சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் இல்லை. சில பள்ளிகளில், வசதி உள்ள பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்படுகின்றனர். பல இடங்களில், இல்லை என்பது கவலைக்குரியது. மாணவர்களுக்கு, கல்வி எப்படி இருக்க வேண்டுமோ, அதேபோல் சுகாதாரமும் இருக்க வேண்டும். எனவே, தமிழக அரசு பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories: