பொதுக்குழு நாளில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் 70 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக பொதுக்குழு அன்று நடந்த கலவரம் தொடர்பாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் ஆதரவாளர்கள் 70 பேரின் முன்ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரின்படி, ராயப்பேட்டை போலீசார் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிராஜராம், தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி மற்றும் தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக் உள்ளிட்ட 43 பேரும், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 27 பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, பொதுக்குழு நடக்கும் நாளில் மனுதாரர்கள் பொதுக்குழுவுக்கு செல்லாமல் தலைமை அலுவலகத்திற்கு வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்ஜாமீன் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: