திருவாரூர் தியாகராஜர், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆடிப்பூர திருவிழா

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில்களில் ஆடிப்பூர விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தியாகராஜர் கோயிலில் வரும் 31ம் தேதி தேரோட்டம நடக்கிறது. திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு ஆடிப்பூர விழா நேற்றிரவு தொடங்கியது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா வந்தார்.

பின்னர் கமலாம்பாள் சன்னதியில் உள்ள கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு ரிஷப படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைதொடர்ந்து மங்கள இசை முழங்க கொடிமரத்தில் ஆடிப்பூர விழா கொடியேற்றப்பட்டது. இன்று கமலாம்பாளுக்கு கேடக உற்சவம் நடந்துது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். விழா நாட்களில் பூதம், யானை, வெள்ளி ரிஷபம், கைலாசர் வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்டம் வருகிற 31ம் தேதி மாலை 3.30 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அதிகாரி ராஜராஜேஸ்வரன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.மன்னார்குடி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர பிரமோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான ஆடிப்பூர பிரமோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி கோயிலில் செங்கமலத்தாயார் சன்னதி முன் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் சிம்மம் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியேற்றப்பட்டது. அப்போது செங்கமலத்தாயார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் ஒரே நேரத்தில் தாயாருக்கும், கொடிக்கும் அலங்கார தீபம் காட்டப்பட்டது.இதைதொடர்ந்து தினம்தோறும் அன்ன வாகனம், வெள்ளி சேஷ வாகனம், சிம்ம வாகனம், கமல வாகனம், யானை வாகனம், புஷ்ப பல்லக்கு, குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் செங்கமலத்தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ஆடிப்பூர பிரமோற்சவ திருவிழா முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 1ம் தேதி நடக்கிறது.

Related Stories: