பிரச்னையை தீர்க்க டெல்லிக்கு விரைவு சட்டீஸ்கர் காங்.கில் உட்பூசல் முதல்வர்-அமைச்சர் மோதல்

புதுடெல்லி: சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பகேலுக்கும், சுகாதார அமைச்சருக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இதனால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்தியாவில் தற்போது ராஜஸ்தான், சட்டீஸ்கரில் மட்டுமே காங்கிரஸ் தனித்து ஆட்சி நடத்துகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து நடத்திய கூட்டணி ஆட்சியை பாஜ சமீபத்தில் கவிழ்த்து விட்டது. இந்நிலையில், சட்டீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகலுக்கும், சுகாதார அமைச்சர் சிங் தேவுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. முதல்வராக பூபேஷ் பாகல் பொறுப்பேற்றார்.  

ஆனால், ஆரம்பம் முதலேயே முதல்வர் பாகலுக்கும், சுகாதார அமைச்சர் டி.எஸ்.சிங் தேவுக்கும் இடையே மறைமுகமாக மோதல் நிலவி வருகிறது. பாகல் முதல்வராக பதவியேற்ற போது, இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த பதவியை வகிக்க வேண்டும் என்றும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிங் தேவ் முதல்வராக வேண்டும் என்றும் ஒப்பந்தமானது. ஆனால், பாகல் பதவியேற்று கடந்த ஆண்டுடன் இரண்டரை ஆண்டுகள் முடிந்த போது, முதல்வர் பதவியை அவர் விட்டுத் தரவில்லை. இதனால், பாகல் - சிங் தேவ் இடையே மோதல் ஏற்பட்டது. கட்சி தலைமை தலையிட்டதை தொடர்ந்து, பாகல் தனது பதவியில் நீடித்து வருகிறார்.

இந்நிலையில், பாகலுக்கு சமீப நாட்களாக சிங்தேவ் தனது எதிர்ப்பை பகிரங்கமாக காட்டி வருகிறார். பஞ்சாயத்து வளர்ச்சி துறைக்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அந்த துறையின் பொறுப்பில் இருந்து சிங் தேவ் விலகினார். ஆனால், இதர துறைகளின் பொறுப்பை அவர் வகித்து வருகிறார். இவர்களின் மோதலை பாஜ தனக்கு சாதகமாக பயன்படுத்தி காய்களை நகர்த்த தொடங்கி இருக்கிறது. இதனால், ஆட்சிக்கு ஆபத்து வரக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகல் திடீரென டெல்லி சென்றுள்ளார். அவரை தொடர்ந்து சிங் தேவும் நேற்று முன்தினம் டெல்லி சென்றார். மேலிடத்தின் அழைப்பின் பேரில் இவர்கள் டெல்லி விரைந்ததாக கருதப்படுகிறது.

Related Stories: