திருவாடானையில் புதர்மண்டி கிடக்கும் அரசு குடியிருப்புகள்-சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருவாடானை : திருவாடானையில் சேதமடைந்த 3 குடியிருப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித்தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தாலுகாவில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 90க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளது. இந்த நிலையில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள நீர்வளம், கட்டிடம் மற்றும் பராமரிப்பு ஆகிய துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் இங்கு தங்கும் வகையில் திருவாடானை - பாரதிநகர் பகுதியில் 3 குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டன.

அந்த வீடுகளில் அரசு அதிகாரிகள் குடியிருந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த 3 குடியிருப்பு கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் போனது. சீமைக்கருவேல மரங்கள் மண்டி வீடுகளில் குடியிருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் காலி செய்து சென்றுவிட்டனர்.

ஆனால் கடந்த மாதம் வரை இந்த சேதமடைந்த குடியிருப்பு வீடுகளில் வசித்ததாக திருவாடானை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர் மற்றும் 2 உதவிப் பொறியாளர்கள் ஆகியோரின் ஊதியத்தில் இருந்து வாடகைப்பணம் பிடித்தம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் இங்குள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தற்சமயம் வாடகைக்கு வீடு கிடைக்காததால் சுமார் 30 கிலோமீட்டர் தூரமுள்ள தேவகோட்டை, காரைக்குடி மற்றும் 50 கிலோ மீட்டர் தூரமுள்ள ராமநாதபுரம் ஆகிய நகர்ப்புறங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.சேதமடைந்த 3 குடியிருப்பு கட்டிடங்களும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மற்றும் மதுப்பிரியர்களின் கூடாரமாக உள்ளது. எனவே பயன்பாடின்றி கிடக்கும் குடியிருப்பு கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக குடியிருப்பு கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: