400 ஏக்கர் குறுவை பயிர் நீரில் மூழ்கியது-டெல்டா விவசாயிகள் கவலை

வல்லம் : தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் கனமழை பெய்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கடும் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி, புதுக்கல்விராயன் பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஓரிரு இடங்களில் பலத்த காற்றில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது. இதனால்ம பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

இதில் அதிகப்படியாக தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியில் 17 சென்டி மீட்டர், வல்லத்தில் 16 செ.மீ., மழையும் பெய்தது. இந்த மழை குறுவை சாகுபடிக்கு ஏற்றதாக இருந்தாலும் தற்போது நடவு நட்ட இளம் பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.தஞ்சாவூர் மாவட்டம் வல்லம், ஆலக்குடி, சித்திரக்குடி, பூதலூரில் வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடப்பட்டிருந்த குறுவை இளம் நாற்றுக்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதன்படி சுமார் 400 ஏக்கரில் இளம் நாற்றுக்கள் மூழ்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் கடந்த மூன்று வாரத்திற்கு முன்புதான் கை நடவு மற்றும் இயந்திரம் மூலம் இளம் நாற்றுக்கள் நடப்பட்டது. தொடர்ந்து மழை பெய்தால் நீர் வடியாமல் பயிர்கள் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: