50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சேலம் ஜவுளி பூங்காவுக்கு இடம் தேர்வு -நேரில் பார்வையிட்டு அமைச்சர் காந்தி ஆய்வு

சேலம் : சேலத்தில் விரைவில் தொடங்கப்படவுள்ள ஜவுளி பூங்கா மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று  நேரில் ஆய்வு செய்த கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்தார். சேலம் அம்மாப்பேட்டையில் செயல்பட்டு வந்த கூட்டுறவு நூற்பாலை பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இடத்தில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, நூற்பாலை அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர்கள், அங்கு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, எருமாபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையை பார்வையிட்டார். அப்போது, சேலத்தில் அமையவுள்ள ஜவுளிப்பூங்காவில் நிறுவப்படவுள்ள ஜவுளித்தொழில் சார்ந்த இயந்திரங்கள், அங்கு பயன்படுத்தப்பட்டு வரும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, அந்நிறுவன இயக்குநர் அழகரசனிடம் கேட்டறிந்தார். இதனையடுத்து, சேலம் அடுத்த மாமாங்கத்திற்கு சென்ற அமைச்சர் காந்தி, ஜவுளிபூங்கா அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஜவுளிபூங்காவுக்கு பயன்படுத்தப்படவுள்ள நிலம், அமைப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் காந்தி கூறுகையில், ‘‘தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கும் வகையில்,  பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், சேலத்திற்கு மிகப்பெரிய ஜவுளிபூங்காவை அறிவித்துள்ளார். தற்போது அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, திட்ட அறிக்கை சார்ந்த பணிகளில், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து, கட்டுமானப் பணிகள் தொடங்கும். இங்கு ஜவுளிப்பூங்கா அமையும் பட்சத்தில், நேரடியாக 10 ஆயிரம் பேரும், மறைமுகமாக 40 ஆயிரம் பேரும் என மொத்தம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதன்மூலம் சேலம் மாவட்ட இளைஞர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு நிலை ஏற்படும்,’’ என்றார். இந்த ஆய்வின்போது, மேயர் ராமச்சந்திரன், அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறித்துறை ஆணையாளர் ராஜேஷ், மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: