நீர் நிரம்பி காணப்படும் சிட்ரபாக்கம் தடுப்பணை: இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. மழைக்காலங்களில் ஏரி நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டால், இந்த தண்ணீர் நாகலாபுரம், சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். இவ்வாறு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள சிட்ரபாக்கத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் எனவும், மேலும் ஊத்துக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளான சிட்ரபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல், கரும்பு, பூ செடிகள் என பல பயிர்கள் வைத்துள்ளனர்.

இவர்களின் நீர் ஆதாரத்திற்காக சிட்ரபாக்கம் பகுதியில் தடுப்பணை கட்டி நீரை தேக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 1989ம் ஆண்டு சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையாலும், ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து வரும் மழை தண்ணீர், சுருட்டபள்ளி அணைக்கட்டிற்கு வந்து பின்னர் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் அடங்கிய சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பியது. இதனால் இந்த ஆண்டு கோடை காலத்தில் ஊத்துக்கோட்டை, அனந்தேரி போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படாது என தெரிகிறது. இதனால் ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள கிராமமக்களும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் அப்பகுதி மக்களும், இளைஞர்களும் ஆர்வமுடன் வலை வீசி மீன் பிடித்து வருகிறார்கள்.

The post நீர் நிரம்பி காணப்படும் சிட்ரபாக்கம் தடுப்பணை: இந்தாண்டு குடிநீர் தட்டுப்பாடு வராது appeared first on Dinakaran.

Related Stories: