குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக் செயலிழப்பு தடுப்புச் சுவர் மீது மோதி பஸ்சை நிறுத்திய டிரைவர்

*சாதுர்ய நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு

கூடலூர் : குமுளி மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் தடுப்புச்சுவரில் மோதி அரசு பஸ் விபத்துக்குள்ளானது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் தமிழக – கேரள எல்லைப் பகுதியில் உள்ள குமுளிக்கு தேனி – கொல்லம் நெடுஞ்சாலையில் லோயர் கேம்ப்பில் இருந்து ஆறு கிலோமீட்டர் தூரம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி மலைச்சாலை வழியாக செல்லவேண்டும். குமுளியில் இருந்து தமிழகத்தின் சென்னை, திருச்சி, நாகர்கோவில், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும், புதுச்சேரிக்கும் அரசு பஸ் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பிற்பகல் திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த அரசு பஸ் ஒன்று குமுளியில் இருந்து திண்டுக்கல் புறப்பட்டு சென்றது. பஸ்சில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சென்ராயன் டிரைவராகவும், கிருஷ்ணமூர்த்தி கண்டக்டராகவும் பணியில் இருந்தனர். பஸ்சில் கம்பம், தேனி, திண்டுக்கல் செல்லும் 68 பயணிகள் இருந்தனர். குமுளி மலைப்பாதையில் மூன்றாவது பாலம் கீழ்பகுதியில் உள்ள ‘எஸ்’ வளைவு பகுதி இறக்கத்தில் பஸ் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை.
இதையடுத்து டிரைவர் சாமர்த்தியமாக வலது பக்கமாக பஸ்சை திருப்பி மலைச்சாலையின் வலது ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி பஸ்சை நிறுத்தினார்.

இதில் பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவருக்கும் கண்டக்டர் கிருஷ்ணமூர்த்திக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பிரேக் பிடிக்காதது தெரிந்ததும், டிரைவர் சாதூர்யமாக செயல்பட்டு வலதுபுறம் மலைப்பகுதியில் மோதி நிறுத்தமால் இருந்திருந்தால், இடதுபுறம் உள்ள கிடுகிடு பள்ளத்திற்குள் பஸ் உருண்டு விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு குமுளி பணிமனை மேலாளர் ரமேஷ் மற்றும் லோயர்கேம்ப் போலீசார் வந்து பார்வையிட்டு, குமுளியில் இருந்து வந்த வேறொரு அரசு பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்தனர்.

The post குமுளி மலைச்சாலையில் வந்த போது பிரேக் செயலிழப்பு தடுப்புச் சுவர் மீது மோதி பஸ்சை நிறுத்திய டிரைவர் appeared first on Dinakaran.

Related Stories: