அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓ.பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டு மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. பொதுக்குழு அறிவிப்பு சட்ட விரோதமானது பொதுக்குழுவை கூட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம் இல்லை. பொது குழு குறித்து அனைத்து உறுப்பினர்களுக்கும் 15 நாட்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கவில்லை எனவே இந்த பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என கூறி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடந்த 8-ம் தேதி விசாரித்தார்.

அந்த விசாரணையில், இந்த வழக்கு உட்கட்சி விவகாரம் தொடர்பானது. உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் சாதாரணமாக தலையிடுவதில்லை என்றும், ஜனநாயக முறைப்படி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடு பொது குழு விதிகள் மூலமாக தீர்வு காண வேண்டும். பொதுக்குழுவுக்கு தடை கோரும் இந்த மனுவை ஏற்க முடியாது. பொதுக்குழுவை நடத்தலாம் என்றும், கூறி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம், மற்றும் டி.வைரமுத்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 13-ம் தேதி மேல் முறையீட்டு மனு தக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையியலான அமர்வு முன்பு ஆஜரான ஓ.பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர், அதிமுக கட்சியில் உறுப்பினர்கள் நீக்கப்படுகின்றன. கட்சியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது. எனவே தங்களது மேல்முறையீட்டு மனுவை அவசரமாகா விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி  ஓ.பன்னீர் செல்வம், மற்றும் டி.வைரமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை அடுத்தவாரம் விசாரிக்க ஒப்புக்கொண்டு அந்த மேல்முறையீட்டு மனுவை அடுத்தவாரம் விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: