மண்ணிவாக்கம் ஊராட்சியில் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தை கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு: ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு

கூடுவாஞ்சேரி: மண்ணிவாக்கம் ஊராட்சியில் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தை, மாநில தரக்கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் மண்ணிவாக்கம் ஊராட்சி உள்ளது. இங்கு, மண்ணிவாக்கம், மண்ணிவாக்கம் விரிவு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், சுவாமி விவேகானந்தா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இதில், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பல ஆண்டுகளாக இயங்கிவரும் நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தை ஊரக வளர்ச்சி துறையின் மாநில தரக்கட்டுப்பாடு கண்காணிப்பாளர் அசோக்குமார் திடீரென நேற்று நேரில் ‘வந்து ஆய்வு நடத்தினார். பின்னர், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தையும் ஆய்வு செய்தார். அப்போது, காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ராகவன், சாய்கிருஷ்ணன், மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கெஜலட்சுமிசண்முகம், பொறியாளர்கள் வெங்கடேசன், ஜெகதீஷ், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ரம்யா, ஊராட்சி செயலர் ராமபக்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து மாநில தரக்கட்டுப்பாடு கண்காணிப்பாளர் அசோக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘அனைத்து வசதிகளுடன் கூடிய நுண்ணுயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் அதற்கு உரிய பணியாளர்களை வேலையில் அமர்த்தி அதனை தொடர்ந்து கண்காணித்து சிறப்பான முறையில் செயல்பட்டு வரும், ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டுகிறேன். அதேபோல் ரூ.60 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மகளிர் சுய உதவி குழு பயிற்சி கட்டிடமும் விறுவிறுப்பாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் திறந்து வைக்கப்படும்’ என்றார்.

Related Stories: