கோடப்பமந்து கால்வாயில் இருந்து சாலை, குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகாமல் தடுக்க நிரந்தர தீர்வு-மாவட்ட கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு

ஊட்டி :  கோடப்பமந்து கால்வாயில் இருந்து மழைநீர் சாலைகள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகாமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் நடுவே சுமார் 3 கிமீ தொலைவிற்கு கோடப்பமந்து கால்வாய் செல்கிறது. ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 27 வார்டுகளில் இருந்து கழிவுநீர் இக்கால்வாயில் கலக்கிறது. குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் மற்றும் மழைநீர் இக்கால்வாய் வழியாக சென்று ஊட்டி படகு இல்லத்தில் கலக்கிறது. இக்கால்வாயின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இரவு நேரங்களில் வீசி எறியப்படும் குப்பைகளாலும், அடித்து வரப்படும் மண்களாலும் பெரிய அளவிலான திட்டுகள் ஏற்பட்டு மழை காலங்களில் இக்கால்வாயை தாண்டி பெருக்கெடுத்து ஓட கூடிய நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகின்றன. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை பாதிப்பு தொடர்பாக நடந்த ஆய்வு கூட்டத்தில் கோடப்பமந்து கால்வாயில் இருந்து மழைநீர் மற்றும் கழிவுநீர் சாலையில் வெளியேறாமல் செல்ல நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், செந்தில்பாலாஜி மற்றும் ராமசந்திரன் ஆகியோரிடம் உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய ஆய்வுகள் நடத்திட அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

இதன் அடிப்படையில் நேற்று ஊட்டி உழவர் சந்தை அருகிலும், படகு இல்ல சாலையில் ரயில்வே பாலத்தின் அருகிலும் கோடப்பமந்து கால்வாயினை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த்குமார், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது கோடப்பமந்து கால்வாய் உற்பத்தியாக கூடிய இடம், மண் திட்டுக்கள் எதனால் ஏற்படுகிறது, கால்வாய் சேதமடைந்துள்ள பகுதிகள் போன்ற விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த்குமார் கூறுகையில், ‘‘ஊட்டி நகரில் உள்ள கோடப்பமந்து கால்வாயில் நகராட்சி பொறியாளர், பொதுப்பணித்துறை பொறியாளர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்களுடன் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. கோடப்பமந்து கால்வாய் தூர்வாரப்பட்டு இருந்தாலும், மழை அதிகமாக பெய்யும்போது சில நேரங்களில் கால்வாயிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது.

 நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறைகளிடம் இது தொடர்பாக முழு விவரங்கள் பெறப்பட்டு நிரந்தர தீர்வு ஏற்படுத்த அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார்.

மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறுகையில், ‘‘கோடப்பமந்து கால்வாயில் படிந்துள்ள திட்டுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் ஏற்கனவே மேற்கொண்டபோதும், மண் மற்றும் கழிவுகள் சேருவதால் அதிக மழைப்பொழிவு இருக்கும் சமயங்களில் கால்வாயில் இருந்து தண்ணீர் சாலை மற்றும் குடியிருப்புகளுக்குள் வருகின்றன. படகு இல்ல சாலையில் ரயில்வே பாலம் அருகேயும் கால்வாயில் இருந்து தண்ணீர் சாலையில் தேங்குகிறது. இப்பகுதி அபாயகரமான பகுதி உள்ளது. நகராட்சி மற்றும் நீர்வளத்துறை மூலம் கருத்துகள் பெறப்பட்டு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காகத்தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கால்வாயின் மேலும் இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட உள்ளது. கால்வாய்க்குள் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், திடக்கழிவுகள் சேராமல் இருக்கவும் நிரந்தரமான தீர்வு காண திட்டம் வகுக்க வேண்டியுள்ளது. முழுமையாக திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்’’ என்றார்.

 ஊட்டி நகராட்சி பொறியாளர் இளங்கோவன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் உதவி செயற்பொறியாளர் சதீஸ்குமார், உதவி பொறியாளர் திவ்யா, ஊட்டி தாசில்தார் ராஜசேகர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: