ஈத்தாமொழி அருகே துணிகரம் டெய்லர் வீட்டில் 48 பவுன் கொள்ளை-பூட்டிய வீட்டை உடைத்து கைவரிசை

ஈத்தாமொழி : ஈத்தாமொழி அருகே டெய்லர் வீட்டில் பூட்டை உடைத்து 48 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈத்தாமொழி அருகே உள்ள கொடிக்கால்காலனி காளிச்சன் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(55). வெளிநாட்டில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.

 இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் மரைன் டெக்னாலஜி படித்து விட்டு பயிற்சிக்காக சென்னையில் தங்கியுள்ளார். மகள் எம்எஸ்சி படித்து வருகிறார். வீட்டில் தாயும், மகளும் மட்டும் தனியாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தாயும், மகளும் வீட்டை பூட்டி வல்லன்குமாரன்விளையில் உள்ள பாட்டி வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை சென்றனர். பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினர்.அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அதுபோல் மாடியில் இருந்த கதவும் திறந்து கிடந்தது.

வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் இருந்த நகைகளை காணவில்லை. அதுபோல் மற்றொரு அறையில் சூட்கேசில் வைத்திருந்த நகைகளையும் காணவில்லை. மொத்தம் 48 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து ஈத்தாமொழி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுசீந்திரம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி, கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டின் பின்புறம் உள்ள தோப்பு வரை ஓடி விட்டு நின்று விட்டது.

காளிச்சன்தோப்பு கிராமத்தில் அடுத்தடுத்து வீடுகள் உள்ள பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஆட்கள் இல்லாததை தெரிந்து கொண்டு கைவரிசை காட்டியிருப்பது தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: