தெலங்கானா முதல்வர் பேச்சால் பரபரப்பு கோதாவரியில் வெள்ளம் வெளிநாடுகள் செய்த சதி

ஐதராபாத்: ‘கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு வெளிநாட்டு சதி காரணமாக இருக்கலாம்’ என  தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சந்தேகம் கிளப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளம் பாதித்த பத்ராச்சலம் நகரை முதல்வர் சந்திரசேகரராவ் ஹெலிகாப்டரில் நேற்று பார்வையிட்டார்.

அதன் பின்னர் அவர்  கூறுகையில்,‘‘கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் வெளிநாட்டு சதி இருக்க வாய்ப்புள்ளது. தற்போது மேகவெடிப்பு என்ற புதிய முறை வந்துள்ளது. இதன் பின்னணியில் பல்வேறு சதி திட்டங்கள் உள்ளதாக தெரிவிக்கின்றனர். சில வெளிநாடுகள் வேண்டும் என்றே நம் நாட்டில் மேகவெடிப்பை உண்டு பண்ணுகின்றன. முன்பு லே பகுதியில் உருவாக்கினர். பின்னர் உத்தரகாண்டிலும் செயல்படுத்தினர். தற்போது கோதாவரி நீர்பிடிப்பு பகுதியிலும் உண்டுபண்ணுகின்றனர் என்ற தகவல்  கிடைத்துள்ளது’’ என்றார்.

மிகச்சிறந்த நகைச்சுவை: சந்திரசேகரராவின் இந்த குற்றச்சாட்டு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. பாஜ எம்பி பண்டி சஞ்சய் குமார் கூறுகையில்,‘‘ சந்திரசேகரராவின் இந்த பேச்சு இந்த நுாற்றாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை ஆகும். தன்னுடைய தோல்விகளை மறைக்கவே இதுபோன்ற நாடகங்களை அவர் அரங்கேற்றுகிறார்’’ என்றார்.

மாநில காங்கிரஸ் தலைவர்  ரேவந்த் ரெட்டி கூறுகையில்,‘‘ மேகவெடிப்பில் வெளிநாட்டு சதி குறித்த தகவல் இருந்தால் அது பற்றி ஒன்றிய உளவு அமைப்புக்கு அவர் தெரிவிக்க வேண்டும். அதுதான் ஒரு முதல்வரின் கடமை ஆகும்’’ என்றார்.

Related Stories: