ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென சென்னைக்கு மாற்றம்: அதிருப்தி கோஷ்டியினர் வரவில்லை

பனாஜி: ஜனாதிபதி தேர்தலையொட்டி, கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் திடீரென சென்னைக்கு அழைத்து வரப்பட்டு ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்க உள்ளது. இந்நிலையில், கோவா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, ரகசிய இடத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது குறித்து கோவா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த வெள்ளிக்கிழமை சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும், 5 எம்எல்ஏக்களும் நேராக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் திங்கட்கிழமை கோவாவுக்கு திரும்பி, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பார்கள்’’ என்றார். கோவாவில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரசுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 6 பேர் அதிருப்தியாளராக மாறி, பாஜ கட்சிக்கு தாவ முயல்வதாக கூறப்படுகிறது. இதனால், கட்சி உடைக்கப்படுவதை தவிர்க்க, அதிருப்தியாளர்களில் ஒருவரான மைக்கேல் லோபோவை, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து காங்கிரஸ் நீக்கியது. மேலும், காமத், லோபோ ஆகிய 2 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகரிடம் மனு தரப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேரும் வாக்களிப்பதை உறுதி செய்ய அவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், அதிருப்தி எம்எல்ஏக்கள் 6 பேரும் கோவாவிலேயே உள்ளனர். தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் எதற்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள் என்ற விஷயம் தெரியாது என்றும், தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறி உள்ளனர். இந்த விவகாரம் கோவா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: