சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன்; அரையிறுதியில் சிந்து: சாய்னா பிரணாய் ஏமாற்றம்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டியில்  இந்தியாவின் பி.வி.சிந்து  அரையிறுதிக்கு முன்னேற,  சாய்னா, பிரணாய்  ஆகியோர் காலிறுதியில் தோற்று  ஏமாற்றம் அளித்தனர். சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டியில் நேற்று காலிறுதி  ஆட்டங்கள் நடந்தன. மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில்  சிந்து, சீன வீராங்கனை  ஹான் யுஇ உடன் மோதினார்.  முதல் செட்டை 21-17 என ஹான் வசப்படுத்தினார்.

அதன்பிறகு வேகம் கொண்ட  சிந்து  அடுத்த 2 செட்களையும் 21-11, 21-19 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றினார். அதனால் ஒரு மணி 2 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் 2-1 என்ற செட்களில் வெற்றிப் பெற்ற சிந்து அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார். மற்றொரு மகளிர் ஒற்றையர் காலிறுதியில்  சாய்னா நெஹ்வால்  ஒரு மணி 3 நிமிடங்களில் 13-21-, 21-15, 10-22 என்ற செட்களில் கடுமையாக போராடி  ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியிடம் தோற்றார்.

அதேபோல்  ஜப்பான் வீரர்  கோடய் நரோகா உடன் எச்.எஸ்.பிரணாய்  நேற்று ஆடவர் காலிறுதியில்  களம் கண்டார்.  வழக்கம் போல் அதிரடி காட்டி முதல் செட்டை 21-12 என்ற புள்ளிக் கணக்கில் பிரணாய் தனதாக்கினார். ஆனால் அடுத்த 2  செட்களையும் 14-21, 18-21 என்ற புள்ளிக் கணக்கில் போராடி இழந்தார். அதனால் சாய்னாவை தொடர்ந்து பிரணாயும் காலிறுதியில் ஏமாற்றம் அளித்தார்.

மேலும் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர்கள் எம்.ஆர்.அர்ஜூன், துருவ் கபிலா இணை 21-10, 18-21, 17-21 என்ற செட்களில்  இந்தோனேசியாவின்  முகமது அசன், ஹென்ட்ரா சேடியவான் இணையிடம்  போராடி தோற்றது.

இன்று அரையிறுதி: இப்படி இந்தியர்கள் அனைவரும் காலிறுதியுடன் விடை பெற,  சிந்து(7வது ரேங்க்) மட்டும்  அரையிறுதிக்கு முன்னேறி நம்பிக்கை அளித்துள்ளார். அவர் தரவரிசையில் தன்னைவிட பின்தங்கியுள்ள  ஜப்பான் வீராங்கனை சோனா காவகாமி(38வது ரேங்க்) உடன் இன்று மோத இருக்கிறார். அதே நேரத்தில் சோனா காலிறுதியில் தன்னை விட  தரவரிசையில் முன்னிலையில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பவீ சோச்சுவாங்கை(10வது ரேங்க்) 2-0 என நேர் செட்களில் வீ ழ்த்தினார்.

Related Stories: