2 ஆண்டுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 4 கோடி பக்தர்கள் பங்கேற்கும் கன்வார் யாத்திரை துவங்கியது

டேராடூன்: நாடு முழுவதிலும் இருந்து 4 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கக் கூடிய ‘கன்வார் யாத்திரை’ நேற்று தொடங்கியது. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சவான் இந்து மாதத்தில் கன்வார் யாத்திரை எனப்படும் காவடி யாத்திரை 14 நாட்கள் நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டுக்கான கன்வார் யாத்திரை நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக ஏராளமான பக்தர்கள் ஹரித்துவாரில் குவிந்து வருகின்றனர். சமீப காலமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள போதிலும், புதிய கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த யாத்திரைக்கு இந்தாண்டு 4 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். யாத்திரை பாதை முழுவதும் சிசிடிவி கேமராக்கள், டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. சமூக வலைதளங்களும் கண்காணிக்கப்பட உள்ளன. தீவிரவாதிகள் தாக்குதலை முறியடிப்பதற்கான கண்காணிப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

உத்தரகாண்டின் மற்றொரு புகழ் பெற்ற சார்தாம் யாத்திரை கடந்த மே மாதம் முதல் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது, கன்வார் யாத்திரையும் தொடங்கி உள்ளதால், நெரிசலை தவிர்க்க சார்தாம் யாத்திரை பக்தர்கள் ஹரித்துவார்-ரூர்கி தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Stories: