சென்னம்பட்டி வனப்பகுதியில் சேற்றில் வழுக்கி விழுந்து பெண் யானை சாவு

பவானி: சென்னம்பட்டி வனப்பகுதியில் பெண் யானை சேற்றில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்து இறந்து கிடந்தது. ஈரோடு மாவட்டம், சென்னம்பட்டி வனச்சரகம், குருவரெட்டியூர் பிரிவு, எண்ணமங்கலம் காப்புக்காடு முரளி மேற்கு பீட், குரும்பனூர்காடு சரக பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் பெண் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் ஈரோடு மாவட்ட வன அலுவலர் கௌதம், உதவி வனப்பாதுகாவலர் மதிவாணன், வனச் சரகர்கள் செங்கோட்டையன், பழனிசாமி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு, எண்ணமங்கலம் உதவி கால்நடை மருத்துவர் அருள்முருகன் தலைமையில் மருத்துவ குழுவினர் யானைக்கு உடற்கூறாய்வு செய்தனர். இதில், உயிரிழந்தது பெண் யானை, 20 முதல் 30 வயது வரை இருக்கலாம், சேற்றில் வழுக்கி விழுந்ததில் காயம் ஏற்பட்டதால், மீண்டும் எழ முடியாமல் உயிரிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, உடற்கூறாய்வுக்கு பின்னர் யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.

Related Stories: