பொன்னேரி அருகே கோயில் நில ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: வீடுகளுக்கு சீல்வைக்க வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பொன்னேரி: பொன்னேரி அருகே கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் அடுத்த சயனாவரம் கிராமத்தில் காளத்தீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. கோயிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் வீடுகள், கடைகள் கட்டப்பட்டும் விளைநிலங்களில் சிலர் விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் இந்த கோயிலுக்கு சொந்தமான  20 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதால் அதனை மீட்க வேண்டும் என தனிநபர் தொடுத்த பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலத்தினை மீட்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

 

இதனடிப்படையில் கடந்த மாதம் 23ம் தேதி ஆக்கிரமிப்புகளை மீட்க வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்  12 கடைகளுக்கு மட்டும் சீல் வைத்துவிட்டு சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அறநிலையத்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டுவது ஏன் என உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து  கோயில் நிலத்தில் உள்ள 40.வீடுகளை கையகப்படுத்தும் வகையில் சீல் வைப்பதற்காக வேலூர் அறநிலையத்துறை அதிகாரிகள் பொன்னேரி போலீஸ் பாதுகாப்புடன் வந்தனர்.

மாவட்ட அறநிலையத்துறை துணை அதிகாரி சித்ராதேவி, இணை ஆணையர் லட்சுமணன், பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரி ரஜினிகாந்த் மற்றும் இந்து சமய நிலைத்துறை அதிகாரிகளை உள்ளே வர விடாமல் தடுத்த பொதுமக்கள் அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொன்னேரி - செங்குன்றம் சாலையில் குழந்தைகள், பெண்கள் என குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் வீடுகளை அகற்றினால்  நாங்கள் எங்கே செல்வது கண்ணீர் மல்க வேதனையுடன் கூறினர்.

குழந்தைகளுடன் வாழ்விடத்தை விட்டுவிட்டு உடனடியாக வெளியேற உத்தரவிட்டால் சாலையில் இருப்பதை தவிர வேறு வழியில்லை என தெரிவிக்கின்றனர். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மின்கட்டண அட்டை என ஆவணங்களை சாலையில் வீசி எரிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியலில் இருந்து அப்புறப்படுத்த முயன்ற பொன்னேரி போலீஸ் டிஎஸ்பி சாரதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

பொதுமக்கள் போராட்டம் காரணமாக உயர்நீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு சீல் வைக்க முடியாமல் அறநிலையத்துறை அதிகாரிகள், பொன்னேரி வருவாய் துறை பொன்னேரி போலீசார் தினரினார்.

 

பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக பொன்னேரி - செங்குன்றம் சாலையில் சுமார் 1 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கோயில் நிலத்தில் உள்ள குடியிருப்புகளை அகற்ற ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: