பள்ளி, கல்லூரி மாணவர்கள் அசத்தல் காவல்துறையை பெருமைப்படுத்தி 3 ஆயிரம் ஓவியங்கள்-ஆயுதப்படை மண்டபத்தில் காட்சிக்கு வைப்பு

நாகர்கோவில் :  குமரி காவல்துறை சார்பில் நடந்த ஓவிய போட்டியில் 3 ஆயிரம் ஓவியங்கள் வரைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. தமிழக காவல்துறையில் அறிமுகம் செய்துள்ள காவல் உதவி என்ற புதிய செயலி  தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரி மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காவல் உதவி செயலி என்ற தலைப்பில் ஓவிய போட்டி அறிவிக்கப்பட்டு மாணவ - மாணவிகள் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு காவல்துறையினரின் பணிகள் தொடர்பான ஓவியங்களை வரைந்து அனுப்புமாறும், இதிலிருந்து சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கைகளும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. 1 மாதம் காலம் இதற்கான அவகாசமும் அளித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் சுமார் 3000 ஓவியங்கள் வந்தன. 1ம் வகுப்பு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவ, மாணவிகள் வரை ஓவியங்கள் வரைந்துள்ளனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல் பணிகள், காவல்துறையின் மீட்பு பணிகள் உள்பட பல்வேறு விதமான ஓவியங்கள் வந்துள்ளன. இந்த 3000 ஓவியங்களை, நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் காட்சிப்படுத்த எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டார். அதன்படி அந்த மண்டபம் முழுவதும் இந்த ஓவியங்கள் வைக்கப்பட்டன. இதை நேற்று எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :

காவல் உதவி செயலி அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காவல் நிலையங்களுக்கு நேரடியாக வந்து அலைந்து திரிந்து பெறவேண்டிய தகவல்கள், அளிக்கப்பட வேண்டிய புகார்கள் ஆகியவற்றை இந்த செயலியை பயன்படுத்தி பயனடையலாம். இந்த செயலி மூலம் பதிவாக கூடிய புகார்களை உயர் அதிகாரிகள் நேரடியாகவே கண்காணித்து வருகிறார்கள். இந்த செயலியில் பொதுமக்களுக்கு பல்வேறு வசதிகள் உள்ளன. எனவே குமரி மாவட்டத்தில் அதிகம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த செயலி மிகப் பெரிய உதவியாக, பாதுகாப்பானதாக நிச்சயம் இருக்கும்.  இது தொடர்பான ஓவிய போட்டியில் பங்கேற்று ஓவியங்கள் வரைந்து அனுப்பிய மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கும் காவல்துறை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதில் இருந்து சிறந்த ஓவியங்களை தேர்வு செய்ய குழுக்கள் அமைக்கப்படும். இதில் தேர்வு செய்யப்படும் ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றார். பேட்டியின் போது டி.எஸ்.பி. சாம் வேத மாணிக்கம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: