கபினி, கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 1,10,000 கன அடி தண்ணீர் திறப்பு-ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு

மேட்டூர் : கர்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கனமழை காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து, பாதுகாப்பு கருதி நேற்று மாலை முதல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 78,000 கனஅடி வீதமும், கபினி அணையில் இருந்து 38,000 கனஅடி வீதமும் என விநாடிக்கு 1.10 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர், தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு பெருக்கெடுத்து வருகிறது.

ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்து, நேற்று காலை பிலிகுண்டுலுவில் 18,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 5 மணியளவில் 43,000 கனஅடியாக அதிகரித்தது. மாலை 6 மணியளவில் விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மெயின்அருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட இடங்களில் பாறைகளை மூழ்கடித்தவாறு புதுவெள்ளம் பொங்கி பாய்கிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் நேற்று 2வது நாளாக தடை நீடித்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் சேர்ந்து கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

 இதேபோல் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 3,149 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8,010 கனஅடியாக அதிகரித்தது. காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான நீர் தேவை அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 98.29 ஆக இருந்தது நேற்று 98 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 62.27 டிஎம்சி. இதனிடையே, கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் 1 லட்சம் கன அடி நீர், இன்று ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: