அக்னிபாதை திட்டத்தோடு ஜப்பான் சம்பவத்தை எண்ணிப் பாருங்கள்: திரிணாமுல் காங். சாடல்

கொல்கத்தா: ‘முன்னாள் ராணுவ வீரரின் கையால் ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அக்னிபாதை திட்டம் குறித்து இந்திய மக்களின் அச்சத்தை உறுதி செய்துள்ளது’ என திரிணாமுல் காங்கிரஸ் கூறி உள்ளது. முப்படைகளில் வீரர்களை சேர்ப்பதற்கான, 4 ஆண்டு கால குறுகிய சேவையான, அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், ஒன்றிய அரசு பின்வாங்காமல், ஆட்தேர்வுக்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளது. இதற்கிடையே, ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, அந்நாட்டின் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரால் பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தோடு, அக்னிபாதை திட்டத்தை தொடர்புபடுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான ‘ஜகோ பங்களா’வில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘முன்னாள் ராணுவ வீரரின் கையால் ஜப்பான்  முன்னாள் பிரதமர் அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அக்னிபாதை திட்டம்  குறித்து இந்திய மக்களின் அச்சத்தை உறுதி செய்துள்ளது. இத்திட்டம் குறித்து பாஜ மறுஆய்வு செய்ய வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: