பதவி ஏற்பின்போது எடுக்கப்பட்ட உறுதிமொழிக்கு எதிராக கவர்னர் கருத்து வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்: டி.ஆர்.பாலு கண்டனம்

சென்னை: பதவி ஏற்பின்போது எடுக்கப்பட்ட உறுதிமொழிக்கு எதிராக கருத்துகளை வெளியிடுவதை கவர்னர் தவிர்க்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், ‘திராவிடர்’ குறித்து ஆளுநர் அடுத்த விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார். ‘திராவிடர்’ என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள்தான் என்று ஆளுநர் சொல்லி இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆங்கிலேயர்களது வருகை கி.பி.1600ம் ஆண்டு என வைத்துக் கொண்டால், அதற்கு முன்னதாக ‘திராவிடம்’ என்ற வார்த்தை இந்தியாவில் இல்லையா. இல்லை என்று ஆளுநர் சொல்கிறாரா. இப்படி நிரூபிப்பதன் மூலமாக அவர் என்ன சொல்ல வருகிறார்.

ஒன்றிரண்டு புத்தகங்களை மேலோட்டமாக ஆளுநர் வாசித்தாலே ஆரியர்-திராவிடர் என்ற உண்மையை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆயிரமாண்டு பள்ளத்தை 100 ஆண்டுகளில் நிரப்பி வருகிற இயக்கம் தான் திராவிட இயக்கம் ஆகும். இதனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பார்த்தாலே மிரண்டு கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய பீதி தான் ஆளுநர் பேச்சில் வெளிப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு கீழ் இன்று இந்தியா இல்லை. பாஜ ஆட்சியில் தான் இன்று இந்தியா இருக்கிறது.

அதே வேற்றுமைகளை நீக்கும் செயல்கள் என்னென்ன என்று பார்த்து அதனை முன்னெடுப்பதற்கு தன்னால் முடிந்த காரியங்களை ஆளுநர் செயல்படுத்தலாம். மற்றபடி கடந்த கால வரலாற்றுக்கு கற்பனை முலாம் பூசி, உண்மையான பிரச்னைகளை திசை திருப்ப முன்வர வேண்டாம். கவர்னர், ஜெனரல் போன்ற பதவிகள் எல்லாம் கூட பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டவை தான் என்பதையும் நினைவூட்டுவதோடு, தமிழக ஆளுநர் தன் பதவியேற்பின் போது, அரசியல் சட்டத்தின் மீது எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: