2வது டெஸ்டில் ஆஸி. இன்னிங்ஸ் தோல்வி தொடரை சமன் செய்தது இலங்கை: அறிமுக வீரர் பிரபாத் ஆட்ட நாயகன்

காலே: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 39 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 364 ரன் குவித்து ஆல் அவுட்டானது. லாபுஷேன் 104, ஸ்டீவன் ஸ்மித் 145* ரன் விளாசினர். இலங்கை பந்துவீச்சில் அறிமுக சுழல் பிரபாத் 6 விக்கெட் வீழ்த்தினார். ரஜிதா 2, ரமேஷ், மகேஷ் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கருணரத்னே 86, குசால் 85, மேத்யூஸ் 52, கமிந்து 61 ரன் விளாசி ஆட்டமிழந்தனர். சண்டிமால் 118 ரன், ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரமேஷ் 29, மகேஷ் தீக்‌ஷனா 10 ரன்னில் வெளியேற, பிரபாத், ரஜிதா டக் அவுட்டாகினர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 554 ரன் குவித்து ஆட்டமிழந்தது (181 ஓவர்). அபாரமாக விளையாடிய சண்டிமால் 206 ரன்னுடன் (326 பந்து, 16 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க் 4, ஸ்வெப்சன் 3, லயன் 2, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 190 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. அணி இலங்கை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 151 ரன்னில் சுருண்டது. வார்னர் 24, கவாஜா 29, லாபுஷேன் 32, கிரீன் 23, கேரி 16*, கேப்டன் கம்மின் 16 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ரன் வித்தியாசத்தில் வென்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.  பிரபாத் 6, மகேஷ், ரமேஷ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 2 இன்னிங்சிலும் சேர்த்து 12 விக்கெட் வீழ்த்திய அறிமுக வீரர் பிரபாத் ஜெயசூரியா ஆட்ட நாயகன் விருது பெற்றார். சண்டிமால் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Related Stories: