கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்-குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் கடும் ஏமாற்றம்

கோபி : கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள். குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் கடும் ஏமாற்றமடைந்தனர்.கோபி  அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் பவானி ஆற்றின்  குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையில் சுமார் 15 அடி உயரத்தில்  இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதாலும், பெண்கள், குழந்தைகள்  பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும், மேலும் குறைந்த செலவில் விடுமுறையை  போக்க முடியும் என்பதால் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் 10  ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு குடும்பத்துடன்  வருவது வழக்கம்.இந்நிலையில் நேற்று (ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால் சுமார் 5  ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகை தந்தனர்.  

ஆனால் அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் வெளியேறியதால், சுற்றுலா  பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும் ஆங்காங்கே குறைந்த அளவில்  கொட்டிய தண்ணீரில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருகில்  உள்ள பூங்காவில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தனர். கொடிவேரி  அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்ததை தொடர்ந்து பங்களாபுதூர்,  மற்றும் கடத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

Related Stories: