பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு; தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

சென்னை: பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நண்பர்கள், உறவினர்களுக்கு பிரியாணி விருந்து படைத்தனர். தியாகத்தை போற்றும் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய மக்களால் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. பக்ரீத் திருநாளையொட்டி பள்ளி வாசல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜாமியா மசூதியில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த பெருநாள் தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை பிராட்வே டான் போஸ்கோ பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ உரையாற்றினார். இதேபோல் சென்னை தீவுத்திடல், திருவல்லிக்கேணி பெரிய மசூதி, பெரியமேடு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பங்கேற்றனர். சிறப்பு தொழுகை முடிந்தவுடன் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளையும் வழங்கினர். பக்ரீத் பண்டிகை நன்னாளில் இறை தூதர் நபியின் வழியில் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை குர்பானி எனப்படும் புனித பலி கொடுப்பது வழக்கம்.

இதன்படி தொழுகையை முடித்து கொண்டு வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்தனர். இவற்றில் 3ல் 2 பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். இது மட்டுமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து படைத்தனர். பக்ரீத் தொழுகை நடைபெற்ற அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.  பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் சிக்கன், மட்டன் பிரியாணி விற்பனை அதிகமாக இருந்தது. சில இடங்களில் பார்சல் வாங்க மக்கள் கியூவில் நின்ற காட்சியையும் காண முடிந்தது. பக்கெட் பிரியாணி விற்பனை வழக்கத்தை விட அதிக அளவில் நடைபெற்றதாக பிரியாணி கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

Related Stories: