மாவட்டத்தில் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்தால் ரூ. 1 லட்சம் வரை அபராதம்; அதிகாரிகள் எச்சரிக்கை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்களுக்கு ரூ. 100 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான கேரிபேக், மேஜை விரிப்பு, ஸ்பூன் மற்றும் கொடி உள்ளிட்ட பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கை, கடந்த 1ம் தேதி முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்கள், மளிகை கடைகள், சந்தைகள், சூப்பர் மார்க்கெட்டுகளில் தினமும் சுகாதார பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், பேரூராட்சி அலுவலர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். இதன் விபரங்கள் தினமும் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஆகிய 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 322 ஊராட்சிகள் உள்ளன.

அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், சுற்றுச்சூழலை காப்போம் என்ற கோஷத்துடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உள்ளாட்சி அமைப்பினர் மேற்கொண்டு வருகிறார்கள். இதுகுறித்து, நாமக்கல் நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி கூறியதாவது: நாமக்கல் நகராட்சி பகுதியில் தினமும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஓட்டல்கள், மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட், ஜவுளி கடைகளில் சோதனை செய்து பயன்பாட்டில் உள்ள ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் கடை உரிமையாளர்களுக்கு ரூ. 100 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சிறிய கடைகளில் முதன்முறை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் ரூ. 100 அபராதமும், 2ம் முறை ரூ. 200ம், 3ம் முறை ரூ. 500ம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 4வது முறை அந்த கடை சீல் வைக்கப்படும். இதேபோல், கடையின் வகைகளை பொறுத்து அபராதம் அதிகரிக்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைக்கும் வினியோகஸ்தர்களுக்கு முதல் முறை ரூ. 25 ஆயிரம் அபராதம், 2ம் முறை ரூ. 50 ஆயிரம், 3ம் முறை ரூ. 1லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசின் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சுகாதார அலுவலர் திருமூர்த்தி தெரிவித்தார். மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: