தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் காணாமல் போன சீகன்பால்கு தமிழில் அச்சடித்த பைபிள் லண்டனில் மீட்பு-தரங்கம்பாடிக்கு கொண்டு வர வலியுறுத்தல்

தரங்கம்பாடி : தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் காணாமல் போன சீகன்பால்கு தமிழில் அச்சடித்த பைபிள் லண்டனில் மீட்கப்பட்டது. இதை தரங்கம்பாடிக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.ஜெர்மனியை சேர்ந்த பாத்லோமேயு சீகன்பால்கு கி.பி.1706ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி தனது நண்பன் புளுட்சோன் என்பவருடன் கடல்மார்க்கமாக தரங்கம்பாடி வந்தார். அப்போது தரங்கம்பாடியை டேனீஷ்காரர்கள் ஆட்சி நடத்தி வந்தனர். அவர்களின் அனுமதியுடன் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதுடன், தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு அதை படித்து தமிழுக்கு தொண்டாற்ற தொடங்கினார். அதன் விளைவாக தமிழில் அச்சக்கலையை கொண்டு வர முயற்சி எடுத்தார்.

ெஜர்மனியில் இருந்து அச்சு மிஷினை எடுத்து வந்து தரங்கம்பாடியில் தமிழ் எழுத்துக்களை வடிவமைத்து 24.10.1712ல் தரங்கம்பாடியில் தமிழ் அச்சுக்கூடத்தை அமைத்தார். 1715ல் கிறிஸ்துவர்களின் புனித நூலின் ஒரு பகுதியான புதிய ஏற்பாட்டை தமிழில் அச்சிட்டு சாதனை படைத்தார். முதல் முறையாக தமிழ் எழுத்துக்கள் அச்சுக்கலையில் வந்தது. அவர் தமிழில் அச்சடித்த புதிய ஏற்பாடு என்னும் பைபிள் தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் வைக்கபட்டிருந்தது. அந்த பைபிள் 2015ம் ஆண்டு தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போய்விட்டது.

இப்பொழுது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லண்டனில் அதை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யுனஸ்கோ ஒப்பந்தத்தின்படி அந்த பைபிளை தழிகத்திற்கு கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. பழமையான அந்த பைபிளை தரங்கம்பாடியில் உள்ள சீகன்பால்கு வாழ்ந்த அவர் வீட்டில் அமைக்கபட்டுள்ள அருங்காட்சியகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: