புதுப்பட்டினம் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது ஊழல் புகார்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது, அதிமுக மாவட்ட நிர்வாகி ஊழல் புகார் கூறியுள்ளார்.    மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.  திருக்கழுக்குன்றம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சியில் அதிமுகவை சேர்ந்த  காயத்ரி தனபால் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தற்போதைய ஒன்றிய கவுன்சிலருமான தனபால் என்பவரில் மனைவி. இந்நிலையில், அதே புதுப்பட்டினத்தை சேர்ந்த அதிமுக மாவட்ட பிரதிநிதியான காதர் உசேன்,  புதுப்பட்டினம் ஊராட்சியில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் ஏற்கெனவே நேரில் புகார் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று காதர் உசேன் நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,  ‘கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புதுப்பட்டினத்தில் ஏகப்பட்ட முறைகேடு நடந்துள்ளது. இதுப்பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவலை தொடர்ந்து கடந்தாண்டு  நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளித்ததாக  கொடுத்த கணக்கில் முறைகேடும், பொக்லைன் மூலம் மழை நீரை அகற்றிய பணியில் முறைகேடும் நடந்துள்ளது. ஊராட்சியில் பல்வேறு பணிகள் செய்யாமலேயே செய்ததாக பணம் எடுத்துள்ளனர். இது சம்மந்தமாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்று மக்களின் வரிப்பணம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இச்சம்பவம், புதுப்பட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: