சர்ச்சை பதிவுகளை வெளியிட்ட பாஜக, ஐடி பிரிவு தலைவர் நீக்கம்; அரியானா தலைமை நடவடிக்கை

சண்டிகர்: சர்ச்சை பதிவுகளை வெளியிட்ட விவகாரத்தில் சிக்கிய அரியானா மாநில ஐடி பிரிவு தலைவரை அம்மாநில பாஜக தலைமை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. பாஜகவின் அரியானா மாநில பிரிவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவு தலைவராக அருண் யாதவ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2017 மற்றும் 2022ம் ஆண்டுகளில் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக வெளியிட்ட சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அவை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. எனவே அருண் யாதவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கூட சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டது. #Arrest ArunYadav என்று டுவிட்டரில் டிரெண்டானது.

இதற்கிடையே இளைஞர் காங்கிரஸ் தலைவர் னிவாஸ் வெளியிட்ட பதிவில், ‘இதுபோன்ற வெறுப்பூட்டும் சிந்தனையாளர்கள் எப்போதாவது கைது செய்யப்படுவார்களா?’ என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் அரியானா பாஜக தலைவர் ஓபி தங்கர், சர்ச்சைக்குள்ளான அருண் யாதவை உடனடியாக கட்சிப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். எனினும், அவர் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாரா? என்பது குறித்து தெரிவிக்கவில்லை. ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, பாஜகவின் டெல்லி பிரிவின் ஊடகத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: