வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 2 ஆயிரம் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் சாதிக்க முடியாத மாணவர்கள்-விளையாட்டு மைதானங்கள் அமைக்க கோரிக்கை

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை   மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 2 ஆயிரம் பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லாததால் சாதிக்க முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். எனவே அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 10ஆயிரத்திற்கும் அதிகமான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது. இதில் சுமார் 2.50லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்டவற்றிற்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் கடந்தாண்டு முதல் அதிகரித்துள்ளது.

மேலும், நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் படித்தால் என்ன பலன் என்பது குறித்து நோட்டீஸ் அச்சடித்து பொதுமக்களிடம் வழங்கப்பட்டது. இதனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக தற்போது, அரசு பள்ளிகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம், கவிதை, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக அரசு பள்ளிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் குறிப்பாக விளையாட்டுத்துறையில் மாணவர்கள் சாதிக்க, விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதில் வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில் சுமார் 2ஆயிரம் பள்ளிகளில் மைதானங்களே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் விளையாட்டு பிரிவுகளில் சாதிக்க முடியாத நிலையாக உள்ளது. எனவே விளையாட்டு மைதானங்கள் இல்லாத அரசு மற்றும் தனியார் பள்ளிகளை கண்டறிந்து, அப்பள்ளி மாணவர்களை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்து, வாழ்வில் உயர்த்த, அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது: மாணவர்களின் வசதிக்காக இருபாலர் பள்ளிகள் அரசினர் ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் இருபாலர் பள்ளிகளை ஆண்கள் பள்ளிகளாக மாற்றிவிட்டு, பெண்கள் பள்ளிகள் தனியாக தொடங்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் மாணவியர்களுக்கு தொடங்கப்பட்ட, அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானத்துக்கு போதிய இடம் ஒதுக்கப்படவில்லை.

அருகே உள்ள பள்ளி, கல்லூரி மைதானத்தில் பயிற்சி பெற அறிவுறுத்தப்பட்டது. இதனால், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறமைகளை வளர்த்து கொள்ள முடியவில்லை. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்கள் பராமரிப்பின்றி உள்ளதை சீரமைத்து, போதிய உபகரணங்கள் வைக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கான மண்டல விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பரிசுத்தொகை மீண்டும் வழங்க வேண்டும். விளையாட்டில் ஈடுபடும் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் அடையும்.

மேலும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களது மூளை செயல்பாடு அதிகரித்து நன்றாக கல்வி பயிலுவார்கள். தற்போது, திமுக ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகளில் பயிற்சி பெறுவதற்கு பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைத்து வருகிறது. அரசு பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுத்தால் மாணவர்கள் பயன்பெறுவார்கள். அரசு பள்ளிகளில் விளையாட்டுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதனால், ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் இந்தியா, அதிகளவில் பதக்கங்களை குவிக்கும். இவ்வாறு கூறினர்.

உதவித்தொகை, விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை

தமிழ்நாடு அரசு சிறந்த  விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை, விருதுகள் மற்றும் சலுகைகள்  வழங்கியுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாயிலாக விளையாட்டு  வீரர்களாக இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹10 ஆயிரம்,  கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹13 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது. தேசிய அளவிலான போட்டிகள்,  அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு ஆணையங்கள் நடத்தும் போட்டிகள், இந்திய  பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு ஆணையம், மத்திய அரசின்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மற்றும் அகில இந்திய  பல்கலைக்கழகங்களின் சார்பில் நடத்தப்படும் பல்வேறு போட்டிகளில்  கலந்துகொள்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாவட்ட விளையாட்டு மைதானம் இல்லாத ராணிப்பேட்டை

வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் தனித்தனியாக பரிக்கப்பட்டது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி விளையாட்டு மைதானம் உள்ளது. ஆனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானம் இல்லை. அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படைக்கு சொந்தமாக விளையாட்டு மைதானம் உள்ளது. அங்கு வெளி ஆட்கள் பயிற்சி பெற அனுமதி வழங்கப்படவில்லை. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: