வீட்டில் குண்டு வெடித்து தந்தை, மகன் சாவு

திருவனந்தபுரம்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் பசல் ஹக் (45). அவரது மகன் சகீதுல் (22). 2 பேரும் கடந்த சில வருடங்களாக கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள மட்டனூரில் பழைய இரும்பு மற்றும் பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

அந்த வீட்டில் மேலும் 2 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து கிடைக்கும் பழைய இரும்பு மற்றும் பொருட்களை வாங்கி வந்து வீட்டில் வைத்திருப்பார்கள். பின்னர் அவற்றை தரம் வாரியாக பிரித்து விற்பனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம்போல பசல் ஹக்கும், மகன் சகீதுல்லும் பொருட்களை பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது அறையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். சத்தத்தைக் கேட்டு அந்த பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது பசல் ஹக்கும், சகீதுல்லும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உடனே 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கண்ணூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி தந்தையும், மகனும் பரிதாபமாக இறந்தனர். இந்த தகவல் அறிந்ததும் மட்டனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் கொண்டு வந்த பழைய பொருட்களில் வெடிகுண்டு இருந்திருக்கலாம் என்றும், அதை பரிசோதித்த போது வெடித்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.

Related Stories: