வலங்கைமான் அரசு மருத்துவமனையில் 2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் பிரேத பரிசோதனை கூடம்: போதிய மருத்துவ உதவியாளர்களை நியமித்து செயல்பட கோரிக்கை

வலங்கைமான்: வலங்கைமான் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரேத பரிசோதனை நடைபெறாத நிலையில் பிரேத பரிசோதனை செய்வதற்கு தேவையான மருத்துவ உதவியாளர்களை நியமிக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வலங்கைமான் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. வலங்கைமான் அரசு மருத்துமனையில் ஆதிச்சமங்கலம், சந்திரசேகரபுரம், தொழுவூர், மேலவிடையல் கீழவிடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தினசரி 500 பேர் புறநோயாளியாகவும், 10க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் இந்த மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு மருத்துவ உபகரணங்கள் வாங்கப்பட்டது. மேலும் அப்போது மருத்துவமனை வளாகத்தில் பிரேத பரிசோதனை கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

வலங்கைமான் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்படும் தற்கொலை, சாலை விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சந்தேக மரணங்கள் தொடர்பாக வலங்கைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். பிரேத பரிசோதனை கூடத்தில் குளிர்சாதன வசதி செய்யப்படாத நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களது சடலத்தை இங்கு வைத்து பாதுகாப்பதற்கு உரிய வாய்ப்பில்லாமல் உள்ளது. இந்நிலையில் சாலை விபத்து உள்ளிட்டவைகளில் உயிர் இழக்க நேரிட்டால் அவர்களை தனியாரிடம் குளிர்சாதன பெட்டி எடுத்து வரப்பட்டு பிரேதத்தை வைத்து பாதுகாக்கும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலங்கைமான் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால் சாலை விபத்து உள்ளிட்டவைகளில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களை அருகில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இருப்பினும் கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்டதாக இருப்பதால் பிரேத பரிசோதனை திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட எல்லையிலுள்ள மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியதை அடுத்து வலங்கைமான் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக உயிரிழந்தவர் உறவினர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, கால விரயம் உள்ளிட்டவை காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வலங்கைமான் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யாததற்கு முக்கிய காரணம் பிரேத பரிசோதனையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடிய மருத்துவ உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே எதிர்வரும் காலங்களில் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்கும் பொருட்டு வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு பயன்படுத்தக்கூடிய மருத்துவ உதவியாளர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: