நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நுபுர் சர்மாவுக்கு மீண்டும் சம்மன்

டெல்லி: நபிகள் நாயகத்தை அவமதித்த புகாரில் சிக்கியுள்ள நுபுர் சர்மா விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. முகமது நபிகள் குறித்து அவதூறு பரப்பிய விவகாரத்தை தொடர்ந்து, நாட்டில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்த நிலையில், அவர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவருக்கு ஆதரவு தெரிவித்த நபர்களும் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து உச்சநீதிமன்றம், நாட்டில் நடக்கக்கூடிய துயர சம்பவம் அனைத்திற்கும், நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகள் மட்டுமே காரணம்.

அவர் நாட்டையே தீக்கிரையாகி விட்டார் என்ற கடுமையான கண்டணங்களை தெரிவித்திருந்தது. குறிப்பாக, ராஜஸ்தான், சத்தீஷ்கர், மே.வங்கம் என பல இடங்களில் நுபுர் சர்மாவிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நர்கெல்டங்கா காவல் நிலையத்திலும், பின்னர் கொல்கத்தா காவல்துறையின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஆம்ஹெர்ஸ்ட் தெரு காவல் நிலையத்திலும், தனிநபர்கள் அளித்த புகார்களின் அடிப்படையிலும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. கொல்கத்தா காவல்துறையின் அதிகார வரம்பில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களின் கீழ் சர்மா மீது 10 புகார்கள் பதிவு செய்யப்பட்டது.

அவர் காவல்துறையில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில், நுபுர் ஷர்மா இரண்டு சம்மன்களையும் புறக்கணித்து, காவல்துறையில் ஆஜராக கூடுதல் அவகாசம் கோரினார். தொடர்ந்து நான்கு முறை அழைப்பு விடுத்தும் விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்ததது. இந்நிலையில், வரும் ஜூலை 16ம் தேதி நர்கெல்டங்கா காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கொல்கத்தா காவல்துறை முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக வெளிமாநிலங்களுக்கு சென்றால் ஆபத்து; எனவே அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நுபுர் சர்மா வைத்திருந்தார்.

அதனை விசாரித்த பொழுது, அவருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர் நேரில் செல்வாரா? அல்லது மீண்டும் நீதிமன்றத்தை நாடி விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

Related Stories: