பாஜக குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அப்பாஸ் நக்வி?.. அடுத்தடுத்து 2 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமாவால் பரபரப்பு

டெல்லி: அடுத்தடுத்து 2 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமாவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்து முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார். மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் முடிவடையும் நிலையில் மீண்டும் எம்.பி. ஆகும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்தார்.

ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியில் இருந்தும் விளக்கினார் முக்தார் அப்பாஸ் நக்வி. பீகார் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார் அப்பாஸ் நக்வி. இவரின் ராஜினாமாவை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாஜகவின் சார்பில் எந்த ஒரு இஸ்லாமிய எம்பி.யும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசு துணை தலைவர் பதவிக்கு பாஜக சார்பில் முக்தார் அப்பாஸ் நக்வி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஒன்றிய எஃகு துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங் தனது பதவியில் இருந்து விலகினார்.

ஆர்.சி.பி.சிங்-கின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். மாநிலங்களவை எம்.பி. பதவிக்காலம் முடிந்த நிலையில் ஒரே நாளில் 2 ஒன்றிய அமைச்சர்கள் ராஜினாமா செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: