2.90 கோடியில் தடுப்பணை கட்டியும் நாகலாறு ஓடையில் நீர்வரத்து இல்லை: ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க கோரிக்கை

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை கடந்த 2 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் உள்ளது. நீர்வரத்துக்கு தடையாக உள்ள, ஓடை சீரமைப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி பகுதியை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும், 100க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளன. இந்த கிராமங்களில் அதிகளவு விவசாயம் செய்து வருகின்றனர். கிராமப்புறங்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் ஆண்டிபட்டி பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பெய்யும் மழையால் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டு, அந்ததந்த கண்மாய்களுக்கு நீர்வரத்து எற்படுகிறது. இதில் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு அய்யனார்புரம், சமத்துவபுரம், எஸ்.எஸ்.புரம், கரிசல்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் எஸ்.எஸ்.புரம் தெற்கு பகுதியில் நாகலாறு ஓடையில் தடுப்பணை கட்டி, அதில் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்த அரசு திட்டமிட்டது.

அதன்படி தடுப்பணை கட்டுவதற்கு ரூ.2 கோடியை 90 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் இந்த தடுப்பணை கட்டிய நாள் முதல் இன்று வரை தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை, பரவலாக பெய்த நிலையிலும், இந்த நாகலாறு ஓடையில் நீர்வரத்து ஏற்படவில்லை. இந்த ஓடை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீர் தெப்பம்பட்டி கண்மாய், பிச்சம்பட்டி கண்மாய், ஆசாரிபட்டி கண்மாய் வழியாக, ஓடையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தேங்கி அதன்பிறகு ஜம்புலிபுத்தூர் கண்மாய் வழியாக சென்று தண்ணீர் வைகை ஆற்றில் கலக்கிறது. ஆனால் ஓடைகளில் ஆக்கிரமிப்பு, புதர்மண்டி கிடக்கும் செடிகளை அகற்றாமல் இருப்பது, ஓடை வழிபோக்கில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பிரிந்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தண்ணீர் இறுதி வரையில் வருவது சிக்கலாக உள்ளது.

இதுகுறித்து எஸ்.எஸ்.புரம் கிராமத்தை சேர்ந்த சுப்புராஜ் என்பவர் தெரிவிக்கையில், ‘‘எஸ்.எஸ்.புரம் பகுதியில் அமைக்கப்பட்டு தடுப்பணை பல்வேறு கிராமங்களில் உள்ள கிணற்றுக்கு தண்ணீர் சென்று நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், விவசாயிகள் சிரமமில்லாமல் தண்ணீரை பயன்படுத்துவதற்கும் இந்த தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஓடையில் நீர்வரத்து வருவதில்லை. எனவே, தற்போது தென்மேற்கு பருவமழை காலங்களில் தொடங்கியுள்ள நிலையில், பொதுபணித்துறையினர் மற்றும் நீர் மற்றும் நிலவள ஆதாரத்துறையினர் ஓடைகளை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: