கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தான் அந்த மீட்டிங்கில் ஆலோசனை மேற்கொண்ட முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா உள்பட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தேர்வு முடிவுகளை எப்போது வெளியிடுவது? என்பது ஆலோசிக்கப்பட்டது. 12ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அதன் தேர்வு முடிவை திட்டமிட்டப்படி மே 6ம் தேதி வெளியிடுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதேபோல் 10, 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தற்காலிக தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேதியில் முடிவுகளை வெளியிட முடியுமா? என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

அதேபோல் மாநிலம் முழுவதம் புதிய மாணவர்கள் சேர்க்கை எப்படி நடைபெறுகிறது? இதுவரை எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர்?, பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களுக்கு புத்தகம் உள்பட அரசு சார்பில் வழங்கும் பொருட்களை உடனடியாக வினியோகம் செய்ய முடியுமா? அதற்கான பணிகள் எந்த நிலையில் உள்ளது? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

மேலும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம்? என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜுன் 1ம் தேதி திறக்கப்படும். ஆனால் இந்த முறை ஜுன் 1ம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஜுன் 3ம் தேதி திங்கட்கிழமை வந்தாலும் கூட அன்றைய தினமும் சிக்கல் நிலவுகிறது. ஏனென்றால் ஜுன் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அதோடு தமிழ்நாட்டில் பல இடங்களில் கோடை வெயில் அதிகரித்துள்ளது. வெப்ப அலை எந்த ஆண்டும் இல்லாத வகையில் உள்ளது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாமா? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜுன் 2வது வாரத்தில் பள்ளியை மீண்டும் தொடங்கலாமா? என்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி திறப்பு தொடர்பாக எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக இன்னும் ஆலோசனை மேற்கொண்டு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

The post கோடை விடுமுறைக்கு பின் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பது தொடர்பாக அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: