ஓட்டலில் வசதி இல்லை என்று தகராறு பெண் போலீசை கடித்த நடிகை கைது

புனே: மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த 28 வயது நிரம்பிய வெப்தொடர் நடிகை ஒருவர், தனது சொந்த வேலை காரணமாக புனே சென்றார். வாட்கான் ஷெரி பகுதியிலுள்ள ஒரு ஓட்டலில் தங்க, ஆன்லைனில் அறையை முன்பதிவு செய்தார். பிறகு ஓட்டலுக்கு சென்று பார்த்தபோது, அவருக்கு ஏற்ற வசதிகள் அங்கு இல்லை. எனவே, முன்பதிவு செய்த பணத்தை திருப்பி கேட்டார். ஆனால், ஓட்டல் நிர்வாகிகள் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் ஓட்டல் ஊழியர்களுக்கும், நடிகைக்கும் கடுமையான தகராறு ஏற்பட்டது.

 தகவல் அறிந்த புனே நகர காவல்துறை தாமினி படை மகளிர் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பு பிரச்னை குறித்து விசாரணை நடத்தினர். அப்போது பெண் போலீஸ் பர்வீன் ஷேக் என்பவரை, குற்றம்சாட்டப்பட்ட நடிகை திடீரென்று கைகளால் தாக்கியதாகவும், பிறகு அவரது கையை கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார், நடிகையை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பிறகு போலீஸ் எஸ்எஸ் மஞ்சுஷா, குற்றம்சாட்டப்பட்ட நடிகை மீது ஐபிசி 353, 332, 427, 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார். உடனே நடிகையை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: