குஜராத் போல் சலுகைகள் தூத்துக்குடி உப்பு உற்பத்தி தொழில் மேம்படுமா?: உற்பத்தியாளர்கள் கோரிக்கை

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி தொழிலை மேம்படுத்த குஜராத்தைப்போல் சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய அளவில் உப்பு உற்பத்தியில் தமிழகம் 2வது இடத்தில் உள்ள நிலையில், மாநிலத்தில்  தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் வகித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், குளத்தூர், அய்யனார்புரம், வேப்பலோடை, தருவைக்குளம், கீழஅரசரடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவங்காடு, ஆறுமுகநேரி ஆகிய கடற்கரையோர பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

உப்பு வயல்களை உழுது சீரமைத்தல், பாத்தி அமைத்து நீர் பாய்ச்சுதல், உப்பு மிதித்தல், உப்பு வாருதல், சுமை தூக்குதல், மூட்டை பிடித்தல், உப்பு அரவை, பண்டல் போடுதல் என உப்பு உற்பத்தி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவங்கப்படுகிறது. தொடர்ந்து ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சுமார் 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான காலமாகும். அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கும் நேரத்துடன் உப்பு உற்பத்தியும் நிறைவடையும். உப்பு உற்பத்திக்கு தேவையான நிலத்தடி நீர்மட்டம் குறைவு, உப்பளங்களுக்கான குத்தகை தொகை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, உற்பத்தி செலவு அதிகரித்தல், எதிர்பாராதவிதமாக ஏற்படும் இயற்கை சீற்றங்கள், உப்பிற்கு போதிய விலையின்மை போன்றவற்றால் உப்பு உற்பத்தி தொழில் மாவட்டத்தில் முடங்கிக் கொண்டே வருகிறது.

போதிய வருமானம் இல்லாதது, அரசின் மருத்துவ உதவி, நலத்திட்ட உதவிகள் போன்றவை பயன்தரும் வகையில் இல்லாத காரணங்களால் உப்பளத்தொழிலில் ஈடுபடுவதற்கு முன்புபோல யாரும் முன்வருவதில்லை. தற்போது உப்பளங்களில் பணிபுரிந்து வருபவர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைத்து மாற்றுவேலைக்கு அனுப்பி வருகின்றனர்.

உப்பளங்களில் வேலை பார்த்து வருபவர்கள் கூட தற்போது தனியார் கம்பெனிகள், கட்டிட வேலை, வணிகப்பணி போன்ற மாற்றுவேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டனர். இதனால் உப்பு உற்பத்தி தொழிலுக்கு போதுமான தொழிலாளர்கள் கிடைக்காத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் மாவட்டத்தில் உப்பு வயல்களின் ஏக்கர் பரப்பளவு குறைந்துகொண்டே வருகிறது.

மாவட்டத்தில் உப்பு உற்பத்தி நலிவடைந்து, அழிவின் பாதையில் பயணிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் நலிவடைந்து வருவதுடன் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் உப்பளத்தொழிலால் குஜராத் மாநில உப்பு தமிழகத்திற்கு மட்டுமல்ல, தூத்துக்குடிக்கும் இறக்குமதியாகும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

எனவே மாவட்டத்தில் அழிந்து வரும் உப்பு உற்பத்தி தொழிலை பாதுகாக்கவும், உப்பளத் தொழிலாளர்களின் கண்ணீரை துடைத்திடவும் ஒன்றிய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.

இதுகுறித்து, உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில் ஒரு டன் உப்பு உற்பத்தி செய்வதற்கு குறைந்தது ரூ.200 வரை தான் செலவாகிறது.

ஆனால் தமிழகத்தில் ஒரு டன் உப்பு உற்பத்தி செய்ய குறைந்தது ரூ.500 முதல் ரூ.ஆயிரம் வரை செலவாகிறது. குஜராத்தில் மானிய விலையில் மின்சாரமும், உப்பு ஏற்றுமதிக்கு பல்வேறு சலுகைகளும் அரசால் வழங்கப்படுகிறது. ஆனால் இங்கு நிலைமை அப்படி இல்லை. எனவே குஜராத்துடன் நாம் போட்டியிட முடியாத நிலை உள்ளது. உப்பு உற்பத்தித் தொழிலை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதே எங்களின் நீண்டநாள் கோரிக்கை என்றார்.

மழைக்கால நிவாரணத்துக்கு பாராட்டு: தமிழக அரசானது, தற்போது  தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க முன்வந்தது  பாராட்டுக்குரியதாகும். தொடர்ந்து உப்பு உற்பத்திக்கு மானிய விலையில்  டீசல், மின்சாரம் வழங்க வேண்டும். உப்பளத்தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி  பயில உதவி செய்ய வேண்டும். மேலும்  உரிய சலுகைகளை வழங்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Stories: