ஆம்பூர் அருகே பரபரப்பு பழைய நேரத்தில் அரசு டவுன் பஸ் இயக்க கோரி பொதுமக்கள் மறியல்-போக்குவரத்துக்கழக அதிகாரி சமரசம்

ஆம்பூர் : ஆம்பூர் அருகே பழைய நேரத்தில் அரசு டவுன் பஸ் இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போக்குவரத்துக்கழக அதிகாரி சமரசம் செய்து வைத்தார்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து 16 எண் வழித்தடம் உள்ள அரசு டவுன் பஸ் அரங்கல்துருகத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. ஆம்பூரில் இருந்து வெங்கடசமுத்திரம், காரப்பட்டு வழியாக அரங்கல்துருகத்தை அடையும் இந்த பஸ் காலை 8.10 மணிக்கு மீண்டும் அங்கு புறப்பட்டு ஆம்பூர் வந்தடைகிறது.

ஆனால் பொன்னபல்லி மற்றும் சுட்டகுண்டா வழியாக இயக்கப்படும் பஸ் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வழித்தட எண் 16 டவுன் பஸ் கூடுதலாக அப்பகுதிகளுக்கு சென்று அரங்கல்துருகத்திற்கு நேற்று காலை வந்தது. இதனால், 9 மணிக்கு நேர மாற்றம் செய்யப்பட்டதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் காலதாமதாக செல்லும் நிலை ஏற்பட்டது. மீண்டும் அந்த அரசு பஸ் அரங்கல்துருகத்தில் பழைய நேரத்திலேயே இயக்க கோரி நேற்று அப்பகுதிமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அவ்வழியாக வந்த அரசு பஸ்சை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை மேலாளர் அங்கு விரைந்து வந்து பழைய நேரத்திலேயே பஸ்சை இயக்குவதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: