திருத்துறைப்பூண்டி அருகே மின் கம்பங்களில் உரசும் மரங்களை அகற்றும் பணி-மின் ஊழியர்கள் தீவிரம்

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் முதல் குன்னலூர் வரை சாலையோர மின் கம்பங்களில் உரசும் மரம்,செடி கொடிகளை அகற்றும் பணி நடைபெற்றது.தமிழ்நாடு மின்வாரியதுறை மூலம் பொதுமக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் துணைமின் நிலையங்கள் மற்றும் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மின் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் நடப்பதற்கு முன்னதாக பொதுமக்களுக்கு மின்வாரியம் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு காலை முதல் மாலை வரை சீரான மின் விநியோகத்திற்கு தடையாக சாலையோரங்களிலும், தெருக்களிலும் இருந்து வரும் மரம், செடி, ெகாடிகள் ஆகியவற்றை வெட்டி அகற்றும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபடுவார்கள். மேலும் அன்று பழுதடைந்த மின்கம்பிகளும் சரி செய்யப்படும்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் ரயில்வே கேட்டில் துவங்கி குன்னலூர் வரை சாலையோர மின்கம்பங்களில் உரசும் மரங்களால் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு இதனால் பொதுமக்களும் மற்றும் வணிக நிறுவனங்களும் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. பல பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள மின்கம்பங்களில் உரசும் மரங்களை அப்புறப்படுத்துவதில்லை. இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி மின் வாரிய ஊழியர்கள் மேற்கண்ட பகுதியில் நேற்று சாலையோர மின்கம்பங்களில் உரசி மின்தடை ஏற்படுத்தும் மரம், செடிகொடிகளை அகற்றும் பணியில் மின்வாரிய ஊழியர் பணி மேற்கொண்டனர். தொடர்ந்து இந்த பணி நடைபெறும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: