ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு

*தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்

ஆரணி : ஆரணியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த மாட்டை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.ஆரணி நகராட்சி அருந்ததிபாளையத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் சில மாதங்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டது. அப்போது, நகராட்சி ஊழியர்கள் கால்வாயின் மேல் மூடப்பட்டிருந்த கான்கிரீட்டை உடைத்து அடைப்பை சீரமைத்தனர். ஆனால் அந்த கால்வாயை அப்படியே மூடாமல் விட்டு விட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக சென்ற காளைமாடு திறந்த நிலையில் இருந்த கால்வாயில் தவறி விழுந்துவிட்டது.

இதை அப்பகுதி மக்கள் மீட்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து, பொதுமக்களுடன் சேர்ந்து மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரைமணி நேரம் போராடி மாட்டை உயிருடன் மீட்டனர். ஆரணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த நிலையில் ஆபத்தான முறையில் உள்ள கழிவுநீர் கால்வாயில் பேராபத்து ஏற்படும் முன்பு, அதனை மூட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆரணி நகரில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த காளைமாடு appeared first on Dinakaran.

Related Stories: