கோடைவெயில் தாக்கம் எதிரொலி தூத்துக்குடியில் எலுமிச்சை விலை இருமடங்கு உயர்வு

*காய்கறி விலையும் அதிகரிப்பு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் கோடை வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு எலுமிச்சை விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. பீன்ஸ், பட்டானி போன்ற காய்கறி விலையும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் மக்களை அதிக அளவில் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான நாட்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடிப்பதால் மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக மக்கள் குளிர்பானங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக எலுமிச்சை பழஜூஸ் அதிகம் விற்பனையாகி வருகிறது. இதனால், சராசரியாக ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்று வந்த எலுமிச்சை தற்போது கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று கர்நாடகா, கொடைக்கானல், ஊட்டி போன்ற பகுதிகளில் இருந்து உற்பத்தியாகி வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் பீன்ஸ், பச்சை பட்டாணி, கேரட் போன்ற காய்கறி விலைகள் இருமடங்கு அதிகரித்துள்ளது.குறிப்பாக ரூ.60 முதல் 70 வரை விற்று வந்த பீன்ஸ் நேற்று தூத்துக்குடி மார்க்கெட்டில் ₹120க்கு விற்பனையானது.

இதேபோன்று பச்சை பட்டாணி ரூ.80ல் இருந்து ரூ.180 ஆக அதிகரித்தது. ரூ.70ல் இருந்த அவரைக்காய் விலை ₹120 வரை விற்பனையானது. கேரட் விலை ரூ.50ல் இருந்து ரூ.80 ஆக அதிகரித்து காணப்பட்டது. சின்ன வெங்காயம் விலையும் ரூ.75 ஆக அதிகரித்து விற்பனையானது.

இதுகுறித்து தூத்துக்குடி மார்க்கெட் வியாபாரி மாரியப்பன் என்பவர் கூறுகையில், ‘எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கோடை வெயில் அதிகரித்து காய்கறிகள் உற்பத்தி குறைந்துள்ளது. எனவே, தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்தும் குறைந்துவிட்டது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அடுத்து மழை வந்து உற்பத்தி அதிகரிக்கும் வரை இந்த விலை உயர்வு காணப்படும்’ என்றார்.

The post கோடைவெயில் தாக்கம் எதிரொலி தூத்துக்குடியில் எலுமிச்சை விலை இருமடங்கு உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: