எட்டயபுரம் அருகே நீர்வரத்து ஓடை, புறம்போக்கு பட்டா நிலங்களில் சரள்மண் கொள்ளை

*அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

எட்டயபுரம் : எட்டயபுரம் அருகே எத்திலப்பநாயக்கன்பட்டியில் நீர்வரத்து ஓடைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் தனியார் காற்றாலை நிறுவனங்களின் சரள்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எட்டயபுரம் தாலுகா எத்திலப்பநாயக்கன்பட்டியில் தனியார் காற்றாலை நிறுவனங்கள் மின் உற்பத்திக்காக ஏராளமான காற்றாலைகளை அமைத்துள்ளன.

காற்றாலை அமைப்பதற்கு தேவையான நிலங்களை விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி காற்றாலை அமைக்கப்பட்ட பின்னர் அதற்கான மின் கோபுரத்தை சுற்றிலும் சுமார் 5 ஏக்கர் பரப்பளவிற்கு சரள்மண் கொண்டு பரப்புகின்றனர். தங்களுக்கு தேவைப்படும் சரள்மண்ணை அரசு அனுமதி பெற்ற சரள்மண் குவாரிகளிடம் வாங்க வேண்டும் அல்லது நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் சரள்மண் அள்ள வேண்டும்.

ஆனால் காற்றாலை நிறுவனங்கள் அவ்வாறு செய்யாமல் எத்திலப்பநாயக்கன்பட்டியில் உள்ள நீர்வரத்து ஓடைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் இரவோடு இரவாக சரள்மண்ணை அள்ளி சென்று விடுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை என கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எத்திலப்பநாயக்கன்பட்டியில் தனியார் நிறுவனங்கள் நடத்திய சரள்மண் கொள்ளைபோன இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

கிராம மக்கள் தங்கள் விளைநிலங்களுக்கு தேவையான கரம்பை மண்ணை சொந்த ஊரில் உள்ள கண்மாயில் அள்ளி செல்வதற்கே அனுமதி பெறவேண்டும். ஆனால் எங்கிருந்தோ வந்த காற்றாலை நிறுவனங்கள் விவசாய நிலங்கள், நீர்வரத்து ஓடைகள், குளக்கரைகள் என எங்கு வேண்டுமானாலும் அவர்கள் விரும்பிய இடங்களில் சரள்மண் அள்ளி செல்கின்றனர். உயர் அதிகாரிகளின் துணையோடு நடக்கும் இந்த அவலத்தை கேட்க வலுவில்லாமல் நேர்மையான பல அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே பணிபுரிகின்றனர்.

ஆற்றில், ஓடையில் மாட்டு வண்டியில் மணல் அள்ளி சென்றால் வண்டியோடு மாட்டையும் காவல் நிலையத்தில் கட்டிப்போடும் காவல்துறை அதிகாரிகளும் கனரக வாகனங்கள் மூலம் நடக்கும் கொள்ளையை கண்டும்காணாமல் விட்டு விடுகின்றனர். யாரிடம் புகார் அளித்தாலும் பலனில்லை, காலம் தான் பதில்சொல்ல வேண்டும் என விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். இதுகுறித்து எட்டயபுரம் தாசில்தார் கூறுகையில், ‘இதுவரை எந்த புகாரும் வரவில்லை. எத்திலப்பநாயக்கன்பட்டி கிராம மக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post எட்டயபுரம் அருகே நீர்வரத்து ஓடை, புறம்போக்கு பட்டா நிலங்களில் சரள்மண் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: