வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவு தரவரிசை விவரம்-தேர்ச்சி சதவீதத்தில் வேலூர் கடைசி இடம்

வேலூர் : 10, பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை தொடர்ந்து பிளஸ்1 தேர்வு முடிவில் கடைசி இடத்தை வேலூர் மாவட்டம் பிடித்துள்ளதால் கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

2021-2022ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கி, 31 தேதி வரை நடந்தது. தொடர்ந்து, தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அரசு தேர்வுத்துறை இணைய தளம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகைகளில் தேர்வு முடிவுகள் ெவளியிடப்பட்டது. மேலும், மாணவர்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண் விபரம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பிளஸ்  1 பொதுத்தேர்வை 7,858 மாணவர்கள், 8,358 மாணவிகள் உள்பட மொத்தம் 16,216  பேர் எழுதியிருந்தனர். அதில், 5,550 மாணவர்கள், 7,426 மாணவிகள் உள்பட  12,976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 80.02 சதவீத தேர்ச்சியாகும். 10, பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளில்  மாநிலத்தில் கடைசி இடம் பிடித்த வேலூர் மாவட்டம், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளிலும்  கடைசி இடத்தை பிடித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வை 14,678 மாணவர்கள், 14,859 மாணவிகள் உள்பட மொத்தம் 29,537 பேர் எழுதியிருந்தனர். அதில், 11,172 மாணவர்கள், 13,515 மாணவிகள் உள்பட 24,687 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 83.58 சதவீத தேர்ச்சியாகும். மேலும், மாநில அளவிலான தேர்ச்சி தரவரிசை பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டம் 37வது இடத்தை பெற்றுள்ளது. அதன்படி, மாநிலத்தின் கடைசி இடத்தை வேலூர் மாவட்டமும், அதற்கு முந்தைய இடத்தை திருவண்ணாமலை மாவட்டமும் பெற்றிருப்பது வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வு நடைபெறவில்லை. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். எனவே, இறுதியாக கடந்த 2019-2020ம் கல்வி ஆண்டில்தான் பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது. அதன்படி, அந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 94.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாநில அளவில், திருவண்ணாமலை மாவட்டம் 26வது இடத்தை பெற்றது.

ஆனால், ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடந்த பொதுத்தேர்வில், திருவண்ணாமலை மாவட்டம் 11 இடங்களுக்கு கீழிறங்கி 37வது இடத்தை பிடித்திருக்கிறது. மேலும், பிளஸ் 2 தேர்விலும் இந்த மாவட்டம் 37வது இடத்தையே பிடித்தது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் வெகுவாக முன்னேறி, மாநில அளவில் 7வது இடத்தை பிடித்துள்ள நிலையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 37வது இடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 120 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 60 மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற்றது. 6 ஆயிரத்து 898 மாணவர்கள், 6 ஆயிரத்து 980 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 878 மாணவ, மாணவிகள் பிளஸ்1 பொதுத்தேர்வை எழுதினர். இதில் 12 ஆயிரத்து 057 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 80.70. மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 92.98. பிளஸ்1 பொதுத்தேர்வில் மொத்தம் 86.88 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் 31வது இடத்தை பிடித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 154 பள்ளிகளை சேர்ந்த 6,964 மாணவர்கள், 6,874 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 838 பேர் தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 630 மாணவர்கள், 6 ஆயிரத்து 427 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 51 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி மாணவர்கள் தேர்ச்சி 80.84 சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி 93.43 சதவீதமாகவும் உள்ளது. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 87.09 ஆக இருக்கிறது. மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 30வது இடத்தில் திருப்பத்தூர் மாவட்டம் உள்ளது.

Related Stories: