ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா வேட்புமனு தாக்கல்: ராகுல், சரத்பவார், அகிலேஷ் பங்கேற்பு

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்கா நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருக்கான ஆதரவை காட்டும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் சென்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜ தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்கா பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாஜ வேட்பாளர் திரவுபதி முர்மு கடந்த 24ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜ, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் சென்றனர்.

இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிய உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்கா நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அப்போது, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், அசோக் கெலாட், தேசியவாத காங். தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங். தலைவர்கள் அபிஷேக் பானர்ஜி, சவுகதா ராய், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி செயல் தலைவர் கேடி. ராமா ராவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஆர்ஜேடி மூத்த தலைவர் மிசா பாரதி உள்ளிட்ட 14 கட்சிகளின் தலைவர்கள் உடன் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, யஷ்வந்த் சின்கா நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

* இரு கொள்கைகளுக்கு இடையேயான போட்டி

ராகுல் காந்தி கூறுகையில், ``நாங்கள் அனைவரும் யஷ்வந்த் சின்காவுக்கு ஒற்றுமையாக ஆதரவு அளிக்கிறோம். நாங்கள் தனிப்பட்ட ஒருவரை ஆதரித்தாலும், உண்மையில் இது இருவேறு கொள்கைகளுக்கு இடையேயான போட்டியாகும். கோபம், வெறுப்பை கொள்கையாக கொண்ட ஆர்எஸ்எஸ்-க்கும் கருணையை கொள்கையாக கொண்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகும்,’’ என்று கூறினார்.

* பாஜ மீது தாக்கு

யஷ்வந்த் சின்கா அளித்த பேட்டியில், ‘‘ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் என்னை 10வது ஆளாக கருதி இருந்தாலும் கூட அதனை ஏற்றிருப்பேன். நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதால் மட்டும் அதன் மகத்துவத்தையும், கண்ணியத்தையும் உயர்த்திவிட முடியாது. மாறாக நாடாளுமன்ற நடத்தைகள், விதிகள் மதிக்கப்படும் போது அதன் கண்ணியம் அதிகரிக்கிறது. தற்போது ஆளும் கட்சியின் நோக்கம், சித்தாந்தம் என்பது நமது நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைக்கிறது’’ என்றார்.

* சோரன் ஆதரவு யாருக்கு?

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவ், திடீரென யஷ்வந்த் சின்காவுக்கு நேற்று ஆதரவு தெரிவித்தார். ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் யாருக்கு ஆதரவு தருவது என்பதில் குழப்ப நிலையில் இருக்கிறார்.

Related Stories: