திருமலை: ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்.) அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களது நிதிநிலை குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பெண் பிரதிநிதிகளில் 14 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இந்த 14 பெண் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8,234 கோடி. பணக்கார பெண் பிரதிநிதிகளின் முதல் 3 இடங்களை ஆந்திர எம்எல்ஏக்கள் பிடித்துள்ளனர்.
அதன்படி நெல்லூர் மாவட்டம் கோவூர் எம்எல்ஏ வேமிரெட்டி பிரசாந்தி ரெட்டி (தெலுங்கு தேசம் கட்சி), ரூ.716.33 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார பெண் பிரதிநிதி என்ற பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். கடப்பா எம்எல்ஏ ரெட்டப்பகாரி மாதவி (தெலுங்கு தேசம் கட்சி), ரூ.388.10 கோடி சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். விஜயநகரம் மாவட்ட நெல்லிமர்லா எம்எல்ஏ லோகம்மாதவி (ஜனசேனா கட்சி) ரூ.291.17 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். 2024 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களுடன் இணைக்கப்பட்ட பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏ.டி.ஆர்) அறிவித்துள்ளது. ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் பெண் பிரதிநிதிகள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 24 பெண் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளது தெரிந்தது.
